இஸ்ரோ தலைவருக்கு அப்துல் கலாம் விருது : முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: இஸ்ரோ  தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை முதல்வர் எடப்பாடி வழங்கி கவுரவித்தார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் கோட்டையில் கொடியேற்றி வைத்து அப்துல் கலாம் பெயரில் விருது, வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அப்துல் கலாம் விருது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சிவனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் இஸ்ரோ தலைவர் சிவன், சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-2 ராக்கெட் தொடர்பான ஆய்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். அதனால், சென்னைக்கு நேரில் வந்து முதல்வரிடம் வாங்க முடியவில்லை.

இந்நிலையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கைலாசவடிவு சிவன் நேற்று காலை சென்னை, தலைமை செயலகம் வந்தார். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கான 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டார். அப்போது தலைமை செயலாளர் சண்முகம் உடன் இருந்தார்.

Related Stories: