மணலி புதுநகரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் புதிய டாஸ்மாக் கடை திறப்பு

* போராட்டம் நடத்தினால் வழக்குபதிவு செய்யப்படும் என மிரட்டல்

திருவொற்றியூர்:  மணலி புதுநகரில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணலி புதுநகர் பகுதி 2 அருகே புதிய மதுபானக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால், கடும் எதிர்ப்பையும் மீறி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மதியம் மேற்கண்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தகவலறிந்து சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் திரண்டு, டாஸ்மாக் கடையை முற்றுகையிட வந்தனர். ஆனால் மதுபான கடையை சுற்றி ஒவ்வொரு தெருவிலும் நின்றிருந்த ஏராளமான போலீசார் பொதுமக்களை கடைக்கு அருகில் வராமல் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டம் செய்தால் உங்களை கைது செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும்  திரும்பிச் சென்றனர்.

இதனிடையே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் காருண்யதேவி என்பவர் மதுபானக் கடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார், அவரை மதுபான கடைக்கு போக கூடாது தடுத்து நிறுத்தினர். அப்போது காருண்யதேவி, ‘‘இந்தப் பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. மதுபானம் மட்டும் எளிதாக கிடைக்கிறது. அதனால் புதிய கடையில் மதுபானம் வாங்க செல்கிறேன்.  என்னை ஏன் தடுக்கிறீர்கள்,’’ என்று கேட்டார். ஆனாலும்  போலீசார் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று கைது செய்ய முயன்றனர். அப்போது, பொதுமக்கள் திரண்டதால், இரண்டு மணி நேரம் கழித்து, அவரை விடுவித்தனர். பொது மக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது சாலை, குடிநீர், தெருவிளக்கு, மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் பல ஆண்டாக நீடித்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. குறிப்பாக, குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதைப்பற்றி கவலைப்படாத அதிகாரிகள், பொதுமக்களுக்கு கேடு தரும் டாஸ்மாக் கடையை மட்டும் எதிர்ப்பை மீறி திறந்துள்ளனர். அரசின் நோக்கம் நாங்கள் வாழ வேண்டும் என்பதா? அல்லது சாக வேண்டும் என்பதா?. இதை தெளிவுபடுத்த வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: