தமிழக பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர்

* 15 ஆயிரம் பேர் வேலையை விட்டு செல்லும் அபாயம்

* முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டிடங்களின் பராமரிப்பு, ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் 3 லட்சத்திற்கு மேலான பணிகள் என்றால் டெண்டர் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் டெண்டரில் சிறிய ஒப்பந்த நிறுவனங்கள் கலந்துகொண்டு போட்டிப்போட்டு டெண்டர் எடுப்பது கடந்த காலங்களில் நடைமுறையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்ேபாது பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமை உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில் தற்போது, திருவள்ளூர் காக்களூரில் மத்திய அரசு எலக்ட்ரிக்கல்  சோதனை ஆய்வகம் (சிஇடிஎல்) கூடுதல் கட்டிடங்கள் மற்றும் பூந்தமல்லியில் உதவி கருவூலக அலுவலகம் என 2.11 கோடி செலவில் பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதற்கு ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, அவர்கள் கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், சேப்பாக்கம் கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள டெண்டரில் பேக்கேஜ் சிஸ்டம் மூலம் காக்களூர், பூந்தமல்லி ஆகிய இரண்டு பணிகளையும் ஒன்றாக சேர்த்து அதன் மொத்த மதிப்பீடு 2.11 கோடி என டெண்டர் வைத்துள்ளனர்.

இதனால், எங்கள் சங்கத்தில் உள்ள சிறு ஒப்பந்ததாரர்கள் பணி எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே தாங்கள் சிறு மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்கள் நலன் கருதி இரண்டு டெண்டர்களை ஒன்றாக இணைத்து  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே தனித்தனியாக டெண்டர் விட ஆவன செய்ய வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: