தகுதி தேர்வு முடிவு வெளியீடு 99 சதவீதம் ஆசிரியர்கள் பெயில்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இரவு வெளியிட்டது. முதல்தாள் போலவே இரண்டாம் தாளிலும் 99.92 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் 8, 9 தேதிகளில் நடந்தது. நேற்று முன்தினம் முதல் தாளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று தாள் இரண்டுக்கான முடிவுகள் வெளியானது. பட்டப் படிப்புடன் பி.எட் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்காக நடத்தப்படும் இரண்டாம் தாள் தேர்வில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர். இந்நிலையில் 21ம் தேதி இரண்டாம் தாளுக்கான முடிவு வெளியிடப்பட்டது. தேர்ச்சி அடைந்த பட்டதாரிகளுக்கு 26ம் தேதி மதிப்பெண் பட்டியல்கள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முதல் தாள் தேர்வில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளது போல, நேற்று வெளியான இரண்டாம் தாள் தேர்விலும் 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில் தேர்ச்சி அடைந்தவர்களின் பதிவு எண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதன்படி அந்த குறிப்பிட்ட நபர் தனது பெயர், பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கான மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். மொத்த தேர்வு எழுதியோர் 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர்.

10 மதிப்பெண்ணுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் 11 பேர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 324 பேர். மொத்த மாணவர்களில் 90க்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் 24 பேர் மட்டுமே. இரண்டாம் தாள் தேர்வில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 பேர் தோல்வி அடைந்துள்ளதாக தெரிகிறது. தேர்ச்சி வீதம் 0.08 சதவீதம். தோல்வி அடைந்தோர் 99.92 சதவீதம் பேர்.

தேர்வு எழுதியோர்     3,79,733

10க்கும் குறைவாக எடுத்தவர்கள்    11

82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்

(தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்டது)    324

90க்கும் மேல் எடுத்தவர்கள்    24

தேர்ச்சி வீதம்    0.08%

தோல்வி அடைந்தோர்    99.92%

Related Stories: