ஒரே வளாகத்தில் உள்ள மாநகராட்சி, ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கலாம்

சென்னை: ஒரே வளாகத்தில் செயல்படும் மாநகராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களே கண்காணிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகபள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார். அதில்,அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய்ய பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் தனித்தனியே தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஈராசிரியர்களை கொண்டு செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அதிக அளவில் உள்ளதால் அவர்களில் ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றாலோ அல்லது பணி நிமித்தமாக சென்றாலோ அந்த பள்ளிகள் தேக்க நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவும், அனைத்து பணி நாட்களில் பள்ளிகளை செயல்படுத்தவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படும் போது அவற்றை கண்காணிக்கும் அலுவலர்கள் நியமிக்க வேண்டியுள்ளது. அதனால் உயர்நிலை, மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்த பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரம் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, தொடக்க நடுநிலைப் பள்ளிகளை ஒரே வளாகத்தில் கொண்டுள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: