புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் தேக்கம்: மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

ஆவடி: புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் ஆவடி பகுதியில் கழிவுநீர் விடப்படுகிறது. ஆந்திரா மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் அருகே பூண்டி ஏரிக்கு  தண்ணீர் வருகிறது. பின்னர், இங்கிருந்து  செவ்வாப்பேட்டை, பாக்கம், வெள்ளானூர், அரிக்கமேடு, செங்குன்றம் வழியாக கிருஷ்ணா கால்வாய் வழியாக  புழல் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் புழலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  ‘‘ஆவடி அருகே பாக்கம், வெள்ளானூர், அரிக்கமேடு, செங்குன்றம் பகுதிகளில் கால்வாய் ஒட்டியுள்ள வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் விடப்படுகிறது.

மேலும் இந்த பகுதிகளில் வீடுகளில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகளை கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால் கால்வாயில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் உற்பத்தியாகிறது. இதனால்  அப்பகுதி மக்கள் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.   தமிழக அரசு சார்பில் ஆந்திர முதல்வரிடம் கிருஷ்ணா நீர் கேட்கப்பட்டது. கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு கிடைத்தால் தண்ணீர் வரும் கால்வாயில் தேங்கிக்கிடக்கும்  கழிவுநீர், குப்பைகள் ஆகியவற்றுடன் புழல் ஏரிக்கு வரும். அப்போது ஏரி நீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். எனவே இனிமேலாவது  அதிகாரிகள் கவனித்து கிருஷ்ணா கால்வாய் அமைந்துள்ள ஆவடி அருகே வெள்ளனூர், அரிக்கமேடு, உள்ளிட்ட  பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: