அதிமுகவில் இணைய கடிதம் கொடுத்தார் ஜெயலலிதாவின் சொத்துக்களை சட்டரீதியாக மீட்பேன்: ஜெ.தீபா பேட்டி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை சட்டரீதியாக மீட்பேன் என எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, எம்.ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரவை கலைக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார். . தன்னுடைய பேரவையை அதிமுகவில் இணைப்பது தொடர்பான கடிதத்தை ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகிய இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று வழங்கினர். தொடர்ந்து, ஜெ.தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தாய்க்கழகமான அதிமுகவுடன் இணைகிறது. தனக்கு பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அதிமுகவுடன் இணைகிறோம்.  

மேலும், நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய 50 பேரின் பட்டியலை இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். என்னுடைய கட்சியில் முன்னர் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கட்சியில் இருந்து ஏற்கனவே சென்றுவிட்டதால் தற்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே என்னுடைய கட்சியில் இருந்து பிரிந்து பல மாவட்ட செயலாளர்களும் வேறு இயக்கங்களில் இணைந்துவிட்டனர். என்னுடைய உடல்நிலை மீண்டும் சரியாகும் வரையில் நான் எந்த பணியிலும் ஈடுபட மாட்டேன். போயஸ் கார்டன் வீட்டை பெறவே என்னுடைய அமைப்பை நான் அதிமுகவுடன் இணைப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் சட்டரீதியாகவே போயஸ்கார்டன் வீட்டை பெற முடியும். எனவே, சட்டரீதியான பணிகள் மூலமே போயஸ் கார்டன் வீட்டை மீட்பேன். ஜெயலலிதாவின் சொத்துக்களை சட்டரீதியாக மீட்ட பிறகு டிரஸ்ட் ஆரம்பித்து மக்களுக்கு உதவுவேன். நாங்கள் ஏற்கனவே தெரிவித்தபடி அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை தான் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய கடிதத்திற்கு அதிமுக தலைமையின் முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: