விமான துறை ஊழல் விவகாரம் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் : வரும் 23ம் தேதி ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விமானப் போக்குவரத்து ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விமான போக்குவரத்து துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் இருந்தார். அப்போது, பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு லாபகரமான வழித்தடங்கள் மற்றும் குறிப்பிட்ட விமான இயக்க நேரங்கள் வழங்கப்பட்டது. இதனால் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வார் என்பவரை சமீபத்தில் கைது செய்தது.  

தீபக் தல்வார் அப்போதைய மத்திய அமைச்சர் பிரபுல் படேலுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த பிரபுல் படேலுக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. பிரபுல் படேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, தற்போது இந்த வழக்கில் நிதி மோசடி தொடர்பாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 23ம் தேதி ப.சிதம்பரம் நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே, ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா என 2 நிதி மோசடி வழக்குகளில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தற்போது விமான போக்குவரத்து ஊழல் குற்றச்சாட்டிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: