ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்... 4,000 பேர் சிறையில் அடைப்பு?

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு முன்னதாக, 4,000 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், கைதானவர்கள் 2 ஆண்டுகள் வரை வெளியே வரமுடியாத பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முதல் ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், 1956ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால், வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், காஷ்மீரின் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பின்னரே அங்கு அமலாகும். இவ்வாறு இருக்க, கடந்த 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். மேலும், ஜம்மு - காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு, லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு - காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் ஜம்மு - காஷ்மீரில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

144 தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக சில இடங்களில் தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதுகுறித்து, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறுகையில், ‘‘ஸ்ரீநகரில் 190க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரிகளும், அரசு அலுவலகங்களும் முழு அளவில் இயங்க துவங்கி உள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களில் அமைதி நிலவுகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது’’ என்றார். நேற்று கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. தொலைத் தொடர்பு ஊழியர்கள் இரவு பகலாக தொடர்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றர். ஆயினும் திடீரென நேற்று மாலை முதல் ஜம்முவின் சில பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏஎப்பி என்ற பிரான்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த 5ம் தேதி ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான அறிவிப்புக்கு முன்பும், பின்பும் பிஎஸ்ஏ எனப்படும் பொது பாதுகாப்பு சட்டப்படி 4,000 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை வைக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது, 2 ஆண்டுகள் வரை விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம். இவர்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், சிறை நிரம்பி உள்ளது. கைது விவரங்களை, அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. மாஜிஸ்திரேட் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கைது விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பிரிவினைவாதிகளும் அடங்குவர். ஸ்ரீநகரில் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களில், சுமார் 6,000 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் முதலில் ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் ராணுவ விமானம் மூலம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சிலர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: