உன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலை கேட்டு வந்த 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பங்கர்மாவ் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது 2017ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றதால் இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களால் அந்தச் சிறுமியின் தந்தை தாக்கப்பட்டார்.

Advertising
Advertising

காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இச்சம்பவங்களை அடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான 5 வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை, டெல்லி சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தற்போது 19 வயதான அந்தப் பெண் சென்ற கார் மீது கடந்த மாதம் 28ஆம் தேதி லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்தப் பெண்ணும், அவரது வழக்கறிஞரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இருப்பினும் கூட சென்ற இரு பெண்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, பி.ஆர். கவாய், ``மாநில அரசு அவர்கள் மீது தொடுத்த வழக்குகளில் தலையிட்டு, அதைஇழுத்தடிக்க விரும்பவில்லை’’ என்றனர். மேலும், வழக்கு  விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விபத்தில் சிக்கிய பெண்ணும், வழக்கறிஞரும் வாக்குமூலம் அளிக்க முடியாத நிலையில் இருப்பதால் விபத்து தொடர்பாக விசாரிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் 2 வாரம் அவகாசம் வழங்கினர். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: