பால் விலையை குறைக்க மக்கள் கோரிக்கை

* மாத பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்

* பிஸ்கெட், டீ சிலருக்கு மதிய உணவு

* குழந்தைகளையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பதை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது  நேரடியாக குழந்தைகள், தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும். மாத பட்ெஜட்டில்  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் அந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஒரு லிட்டர் ஆவின் பால் 6 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பால் விலையை ஏற்றியதால் ஆவின் பாலுக்கு மாறிய பொதுமக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த பால் விலை உயர்வு தங்கள் மாத சம்பளத்தில் பெரும் பகுதியை காலி செய்துவிடும். குழந்தைகள் உள்ள வீடுகளில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தொழிலாளர்கள் பணியின்போது இனி டீ, காபி ேபான்றவற்றை குடிப்பது  என்பது இயலாத காரியமாகிவிடும். எனவே, பொதுமக்கள், தொழிலாளர்கள், நோயாளிகள் என்று அனைத்து தரப்பினரும் பால் விலை உயர்வை திரும்ப பெற ேவண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆவின் பால் விலையை உயர்த்தும்  முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வசந்தி (எம்ஜிஆர் நகர்): பால் விலை உயர்வால் ஒரு மாதத்துக்கு ₹360 வரை செலவு கூடும். ஆண்டு சேமிப்பில் ₹4,800க்கு கரையும். இது நடுத்தர, சாமானிய மக்கள் தலையில் விழுந்த இடி ஆகும். இந்த விலை உயர்வை அரசு திரும்ப பெற  வேண்டும்.சசிகலா (நெற்குன்றம் சி.டி.என் நகர்): ‘‘அதிமுக ஆட்சியில் பால் விலை உயர்வது இது 3வது முறை. இந்த பால் விலை உயர்வு எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் அச்சாணியாக அமையும். நான் ஒரு நாளைக்கு 2 பாக்கெட் பால்  வாங்குகிறேன். தனியார் பாலை விட விலை குறைவு என்பதால் ஆவின் பால் வாங்கி பயன்படுத்துகிறோம். தற்போது திடீரென லிட்டருக்கு ₹6 உயர்த்தினால் என்ன செய்வதென்று தெரியவில்லை.வசந்தி லோகநாதன்(நெற்குன்றம் அகத்தியர் தெரு): பால் விலையை லிட்டருக்கு திடீரென ₹6 அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பேரிடியாக உள்ளது. பால் என்பது அத்தியாவசியான ஒன்று. அதற்கான கொள்முதல் விலை அரசு  மானியமாக பால் உற்பத்தியாளர்களுக்கு தரலாம். அதை விடுத்து அந்த கொள்முதல் விலையை எங்கள் தலையில் போடுவது எந்த விதத்தில் நியாயம்.  

டீக்கடை உரிமையாளர் வேல்முருகன்(மதுரவாயல்): கடந்த 15 வருடமாக டீ கடை வைத்திருக்கிறேன். இப்போது தான் அதிகபட்சமாக பால் விலை ₹6 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் டீ, காபி விலை தவிர்க்க முடியாததாகி  உள்ளது. இது குறித்து எங்கள் சங்கத்தில் பேசி டீ, காபி விலை உயர்வு குறித்து அறிவிக்கப்படும். எம்.சுசிலா (அய்யப்பன்தாங்கல்): விலைவாசி உயர்வால் ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருக்கிறோம். பால் விலை உயர்வு மக்கள் தலையில் சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. ஆளுவோர் ஏழை, நடுத்தர மக்களின் நிலையை பற்றி சிந்தித்தால்  நல்லது.எம்.சுதாகர், சமூக ஆர்வலர்,( திருக்கழுக்குன்றம்):  அரசு எதற்கெல்லாமோ வீண் செலவு செய்யப்படுகிறது. மக்களின் அத்தியாவசிய தேவையாக விளங்கக் கூடிய பால் விலையை உயர்த்தியிருப்பது அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

கந்தவேல் (காஞ்சிபுரம்): எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினர் பல நேரங்களில் பசியாறுவதற்கு டீ, பால், பிஸ்கெட்டை நம்பியுள்ளோம். பால் விலை உயர்வு எங்களை போன்றவர்களை பெரிதும் பாதிக்கும். ஜெலாலுதீன்: டிரைவராக வேலை செய்து வருகிறேன். எனக்கு அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு நாளைக்கு எங்கள் குடும்பத்துக்கு 3 லிட்டர் பால் வாங்குவோம். பால் விலை உயர்வு எங்களை கடுமையாக பாதிக்கும். சுகுமார் (பெரும்புதூர்): நான் டிரைவராக வேலை செய்து வருகிறேன். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது பால் விலை உயர்வால் குழந்தைக்குகூட பால் வாங்க முடியாத நிலையுள்ளது. இனி பாலுக்கு பதிலாக தண்ணீர்தான் குடிக்க  வேண்டும்.கே.மணிமேகலை, (காட்டூர் கிராமம், திருக்கழுக்குன்றம்): ஏழை மக்கள் மீது அக்கறை கொண்ட எந்த அரசாங்கமும் இதுபோன்ற விலை உயர்வை அறிவிக்கமாட்டார்கள். பால் விலையை உயர்த்தியிருப்பது வெந்த புண்ணில் வேலை  பாய்ச்சுவதுபோல் உள்ளது.சமூக சேவகர் அபுபக்கர், (மீஞ்சூர் அரியன் வாயல்): ஆவின் பால் ஏற்றத்தால் தனியார் பால் விலையும் உயரும் என்ற அச்சத்தில் உள்ளோம். திடீரென ஒரு ரூபாய் 2 ரூபாய் ஏற்றினால் பரவாயில்லை. ஒரேடியயாக 6 ரூபாய் ஏற்றினால் என்ன  செய்வது. எனவே, தமிழக அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்.

Related Stories: