அடையாறு, கூவம் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணி நிறுத்தம்: தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கும் அவலம்

சென்னை: சென்னை மாநகர் பகுதிகளில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் வழியாக ஓடும் தண்ணீர் இறுதியாக வங்கக்கடலில் கலக்கிறது. இதில், தண்ணீர் எளிதாக கடக்கும் வகையில் முகத்துவாரங்களில் அவ்வபோது  தூர்வாரப்படுகிறது. கடந்தாண்டு கூவம், அடையாறு முகத்துவார பகுதிகளில் பராமரிப்பு பணிகளில் மேற்கொள்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து கூவம், அடையாறு முகத்துவாரத்தை தூர்வார டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தகாலம் முடிந்து விட்டது. தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு பொதுப்பணித்துறை சார்பில் நிதி தர வேண்டியுள்ளது. இதனால், ஒப்பந்த நிறுவனம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளை நிறுத்தி  விட்டதாக தெரிகிறது.

தற்போது மழை பெய்து வருவதால் அடையாறு, கூவம் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் அதிகளவில் வருகிறது. இந்த நிலையில் தற்போது முகத்துவாரங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாததால் மழை நீர் கடலில் கலக்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘பருவமழை காலங்களில் அடையாறு, கூவம் வழியாக மழை நீர் செல்ல ஏதுவாக தூர்வாரப்பட வேண்டும். ஆனால், முகத்துவாரங்களில் தற்போது தூர்வாரப்படாததால் மழைக்காலத்தில் வெள்ளநீர்  வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்குகிறது. இப்பிரச்னையை தீர்க்க வெள்ள தடுப்பு திட்டத்தின் மூலம் கூவம், அடையாறு, பக்கிங்காம், கொசஸ்தலையாறு கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்’  என்றார்.

Related Stories: