திருவொற்றியூர் கார்கில் நகரில் நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் கிடப்பில் பள்ளி கட்டிட பணி

* அதிகாரிகள் மெத்தனம்  

* மாணவர்கள் தவிப்பு

திருவொற்றியூர்:  திருவொற்றியூரில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ₹1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டு ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  சென்னை மாநகராட்சி 7வது மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் கார்கில் நகரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லை. இதனால் இட நெருக்கடியில் மாணவர்கள்  சிரமத்துடன் படிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ளதால், வெயில் காலங்களில் மிகுந்த வெப்பத்துடன்   மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. கட்டிட சுவர் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் கசிந்து மாணவ, மாணவர்கள் மீது விழுவதால், பாட புத்தகங்கள் நனையும் நிலை உள்ளது.  

எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு ₹1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து  ஓராண்டு ஆகியும் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் போதிய அடிப்படை வசதி இல்லாத, இடநெருக்கடியான, சிதிலமடைந்த கட்டிடத்தில் பாதுகாப்பற்ற முறையில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

கிடப்பில் உள்ள புதிய கட்டிட பணியை விரைந்து துவக்க வேண்டும் என்று பெற்றோர் சென்னை மாநகராட்சி கட்டிட பிரிவு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, இனியாவது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: