மாதந்தோறும் ரூ.25 லட்சம் வரை லாபம் தந்தும் வாலிநோக்கத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

* நலிவடைந்து வரும் தொழிலாளர் குடும்பங்கள்  

* அதிகாரிகள் மெத்தனமே காரணமென புகார்

 சாயல்குடி :   வாலிநோக்கத்தில் மாதம் ரூ.25 லட்சம் லாபம் தந்தும் அரசு உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளர்களின் குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி நலிவடைந்து வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் மெத்தனப்போக்கே காரணமென புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், வாலிநோக்கத்தில் மாரியூர்  - வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. 1974ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் உப்பு தயாரிக்கப்படுகிறது. இங்கு 110க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள், 1,350 ஒப்பந்த பணியாளர்கள், 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் என சுமார் 2,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

 உப்பளம் அமைக்க நிலத்தை சீர்படுத்துதல், பாத்தி கட்டுதல், கடல்நீரை பாய்ச்சுதல். உப்பை விளைவித்து, பிரித்தெடுத்து அவற்றை சேகரித்து சேமித்தல், விளைவித்த உப்பை சுத்திகரித்து  தரம் பிரித்தல், பாக்கெட் போட்டு வெளிச்சந்தைக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் உப்பு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தமிழக அரசிற்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது. இங்குள்ள உப்பிற்கு வெளிமார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் உப்பின் உற்பத்தி தேவையும் அதிகமாகி கொண்டே செல்கிறது.

இதனால்  2017 ஏப்ரல் மாதத்தில் வாலிநோக்கத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம்  மதிப்பீட்டில் இயந்திரங்கள்,  ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா தொண்டு நிறுவனம் இணைந்து புதிய உற்பத்தி அலகு திறக்கப்பட்டது. மேலும் கூடுதலாக இரட்டை சுழற்சி செய்யும் இயந்திரம் ரூ.75 லட்சத்திற்கு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன்மூலம் நாள் ஒன்றிற்கு 5 டன் வரை சுத்திகரிக்கப்பட்ட உப்பு உற்பத்தி செய்யும் திறன் வசதிகள் உள்ளது. இதனால் மாதத்திற்கு ரூ.25 லட்சம் லாபம் ஈட்டி வந்தது.

alignment=

உப்பை சுத்திகரித்து, தயாரிக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தும் கூட,  உப்பின் தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், கூடுதல்  உற்பத்திக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு தயாரிக்கும் உப்பிற்கு நல்ல வரவேற்பும் இருந்தும், வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பதாலும் அரசிற்கு மாதம் ஒன்றிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தில், வேலை பார்த்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் வாழ்க்கை முறை மிகவும் நலிவடைந்து வருகிறது.

இதனால் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.   இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘கடும் வெயிலில், கடல் உப்பு காற்றில், உப்பளத்தில் வேலை பார்க்கும் எங்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு பொருட்களான கையுறை, கண்ணாடி,  முகமூடி, பாதுகாப்பு உடைகள் போன்றவை எதுவுமே வழங்கவில்லை. பணியாளர்களுக்கு  பதவி உயர்வு, ஓய்வு நிதி போன்றவற்றை முறைப்படுத்தவில்லை, உப்பளத்தில்  குடிநீர், கழிவறை, நிழற்கூடம் போன்ற  எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. இவ்வளவு கஷ்டத்தில் வேலை பார்த்து  வரும் நாங்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால்,  நாளொன்றிற்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உப்பு உற்பத்தி பாதிக்கும் அபாயம்  ஏற்படும். ஆனாலும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு, அரசிற்கு லாபத்தை ஈட்டி  தருகிறோம்.

அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் பராமரிப்பின்றி  சேதமடைந்து கிடக்கிறது, இதனால் தினந்தோறும் சொந்த கிராமங்களுக்கு சென்று  வருகிறோம். அதற்கும் பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களுக்கு கூடுதலாக பணம்  கொடுத்து செல்லும் நிலை உள்ளது. எங்களது பிள்ளைகளும் பல்வேறு சிரமங்களுடன்  பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். நிர்வாகத்தில் அடிப்படை வசதிகளை  கேட்டால், உப்பு வாங்கிய தனியார் நிறுவனங்கள் பணம் தரவேண்டியுள்ளது, அந்த  பணம் வந்தால் மட்டுமே போதிய வசதிகளை செய்து தரமுடியும் என கூறுகின்றனர்.  எனவே வாலிநோக்கம் உப்பளத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன்,  தொழிலாளர்களுக்கு தேவையான தொகுப்பு வீடுகள், பள்ளி, பேருந்து வசதி மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்றனர்.

உப்பள தொழிலாளர்கள் (சிஐடியு) சங்க தலைவர் பச்சமாள் கூறுகையில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு அரசு ஒப்பந்தப்படி, உப்பள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் இரண்டு தவணை தொகை வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு மாதசம்பளத்தை முதல் வார இறுதிக்கு வழங்குவது கிடையாது. மாதத்தின் கடைசி வாரத்தில் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு, கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலை உள்ளது. ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் போதிய பாதுகாப்பின்றி இயங்கி வருகிறது.

 இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.25 லட்சம் செலவு செய்தும் கூட, தற்போது பெய்த மழைக்கு வெளிப்புற கட்டுமானங்கள், மேற்கூரைகள் சேதமடைந்து விட்டன. இயந்திரங்களுக்குள் மழைநீர் புகுந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கின்றனர். மாதந்தோறும் வரக்கூடிய ரூ.25 லட்சம் வருவாய் நின்று அரசிற்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது. உப்பளத்தில் தயாரான உப்பு குவியலை பாதுகாக்க மழைக்கால  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், டன் கணக்கில் விளைவிக்கப்பட்ட உப்புகள் மழைக்கு கரைந்து வீணாகி விட்டது. இதனால் அரசிற்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: