யுனஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பூங்காக்களில் நாதஸ்வரம், நடன நிகழ்ச்சி: வரும் வாரங்களில் வில்லுபாட்டு, கட்டக் கூத்து

சென்னை: யூனஸ்கோவின் “கிரியேட்டிவ் சிட்டீஸ்” திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பூங்காக்களில் நாதஸ்வரம் மற்றும் நடனம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டன. வரும் வாரங்களில் வில்லுபாட்டு மற்றும் கட்ட கூத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐநா சபையின் கீழ் செயல்பட்டு வரும் யுனஸ்கோ அமைப்பு  “கிரியேட்டிவ் சிட்டீஸ்” திட்டத்தை கடந்த 2014 ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி சென்னையானது கடந்த 2017ம் ஆண்டு “இசை” பிரிவின் கீழ் சென்னை கிரியேட்டிவ் நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பூங்காக்கள், பொதுஇடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக  இணை ஆணையர் (வ (ம) நி) லலிதா, தலைமையில் கலை மற்றும் பண்பாட்டு துறை, ஆன்மஜோதி, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, மியூசிக் அகாடமி, பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ருதி அறக்கட்டளை  ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.  

அதன் முதல் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபெற்றது. இதை இணை ஆணையர் (வ (ம) நி) லலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக் குழு பிரநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நாதஸ்வர இசை வித்வான் வட இலுப்பை எஸ்.ஆனந்தன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி மற்றும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் பாரதி திருமுருகனின் வில்லுபாட்டு மற்றும்  கிருஷ்ணா கட்டைக்கூத்து நாடக மன்றத்தின் கட்டக் கூத்து நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மேலும் பாரதி வித்யா பவன் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

தனி இணையதளம்

பொதுமக்கள் இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள www.chennaiuccn.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு chennaiuccn@gmail.com என்ற இமெயில் மற்றும் 63792 17918‬ என்ற தொலைபேசி  எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: