* குற்றாலம் முதல் சீவலப்பேரி வரை நிலத்தடி நீர், குடிநீர் பிரச்னை தீரும்
தென்காசி: குற்றாலம் முதல் சீவலப்பேரி வரை சுமார் 80 கிமீ பகுதியை செழிப்படைய செய்த சிற்றாற்றை தூய்மைப்படுத்தும் பணி, இந்த முறையாவது முழுமைப்பெறுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் இரண்டாவது பெரும் நதி சிற்றாறு. வரலாற்றுச் சிறப்பு மிக்க மேற்குத்தொடர்ச்சி மலையின் குற்றாலத்தில் உற்பத்தியாகும் இந்நதியே, பிற்கால பாண்டிய மன்னர்களில் ஒருவரான சடையவர்மன் பராக்கிரம பாண்டியனால் 400 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சி செய்ய தலைமையிடமாக தென்காசியை தேர்வு செய்ய காரணமாக அமைந்தது. வடக்கே கங்கை நதிக்கரையில் காசி விஸ்வநாதருக்கு எழுப்பப்பட்ட ஆலயம்போல் தென்காசியில் பாய்ந்த சிற்றாற்றை சற்று திருப்பி, நதிக்கரையில் காசி விஸ்வநாதர் உடனுறை உலகம்மன் ஆலயத்தை நிர்மாணித்தார் பராக்கிரம பாண்டியன். இன்றளவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இக்கோயிலை பார்வையிட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குற்றாலம் மெயினருவி வழியாக சமதளப் பரப்பில் பாயும் சிற்றாறுடன் ஐந்தருவி ஆறு, அழுதகன்னி ஆறு, அரிகர நதி, அனுமன் நதி, கருப்பாநதி ஆகிய 5 கிளை நதிகளும், குண்டாறு, மொட்டையாறு, உப்போடை ஆறு ஆகிய 3 துணை நதிகளும் இணைகின்றன. சுமார் 80 கிமீ தொலைவிற்கு பயணம் செய்து, நெல்லையை அடுத்த சீவலப்பேரியில் சிற்றாறு தாமிரபரணியுடன் சங்கமிக்கிறது. இவற்றில் அனுமன் நதி குறுக்கே அடவிநயினார் அணையும், சொக்கம்பட்டி பகுதியில் கருப்பா நதியின் குறுக்கே கருப்பாநதி அணையும் கட்டப்பட்டு உள்ளது. சிற்றாறு உற்பத்தியாகும் மலைப்பகுதி கிழக்குச் சரிவாக அமைந்துள்ளதால் அங்கு அணைகள் கட்டுவதற்கு ஏதுவான பகுதிகள் இல்லை. இதனால் சுதந்திரமாக தங்கு தடையின்றி சிற்றாறு பாய்ந்து வருகிறது. சிற்றாற்றின் மூலம் குற்றாலம், மேலகரம், தென்காசி, கீழப்புலியூர், மேலப்பாவூர், சுரண்டை, வீ.கே.புதூர், ஆலங்குளம், மானூர் மற்றும் கோவில்பட்டி தாலுகாவின் சில பகுதிகள், நெல்லை தாலுகாவின் சில பகுதிகள் பயனடைகின்றன. சிற்றாற்றின் மூலம் சுமார் 9 ஆயிரத்து 963 ஏக்கர் நேரடியாகவும், மறைமுகமாக குளங்களின் மூலம் 37 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுக்கு சராசரியாக 157 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது. குற்றாலத்தில் தொடங்கி சீவலப்பேரி வரை 80 கிமீ தொலைவிற்கு பயணம் செய்து விளைநிலங்களை செழிப்பாக்கும் சிற்றாற்றின் குறுக்கே அடிவெட்டான்பாறை, வாழ்விலான்குடி, புலியூர், பாவூர், திருச்சிற்றம்பலம், மாறாந்தை, வீராணம், மானூர், நெட்டூர், பல்லிக்கோட்டை, உக்கிரன்கோட்டை, அழகியபாண்டியபுரம், பிள்ளையார்குளம், செழியநல்லூர், மேட்டு பிராஞ்சேரி, கங்கைகொண்டான் ஆகிய 17 இடங்களில் தடுப்பணைகள் அமைந்துள்ளது. இவை தவிர 19 கால்வாய்களும் உள்ளன. இந்த கால்வாய்களின் மூலம் மொத்தம் 148 குளங்கள் நிரம்புகிறது. ஐந்தருவியாறு மூலம் சுமார் 293 ஏக்கர் நிலங்களும், அரிகர நதி மூலம் சுமார் 445 ஏக்கர், குண்டாறு மூலம் 465 ஏக்கர், மொட்டையாறு மூலம் 142 ஏக்கர், அழுதகன்னி ஆறு மூலம் 827 ஏக்கர், அனுமன் நதி மூலம் 4 ஆயிரத்து 42 ஏக்கர், கருப்பா நதி மூலம் 3 ஆயிரத்து 855 ஏக்கர், உப்போடை மூலம் 445 ஏக்கர், சிற்றாறு மூலம் 8 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது சிற்றாறு 3 மண்டலங்களாக பிரித்து பராமரிக்கப்படுகிறது. அதாவது ஒன்று முதல் ஆறு வரை உள்ள தடுப்பணைகள் உள்ள பகுதி முதல் மண்டலமாகவும், பதினொன்றாவது தடுப்பணை வரை உள்ள பகுதி இரண்டாவது மண்டலமாகவும், பதினேழாவது தடுப்பணை வரை உள்ள பகுதி மூன்றாவது மண்டலமாகவும் பிரித்து பராமரிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏதுமின்றியும், கால்வாய்கள், ஆறுகள் முறையாக பராமரிக்கப்பட்டதாலும் அனைத்து பகுதிக்கும் தங்கு தடையின்றி நீர் கிடைத்து வந்தது. ஆனால் நாளடைவில் ஆகாயத்தாமரைகள், நீர்காத்தான், வேலிகாத்தான் செடிகள், முட்செடிகள் வளர்ந்து ஆற்று நீரோட்டத்தை தடுத்தன. பல்வேறு இடங்களில் குறுகிய மனம் கொண்ட மனிதர்கள் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர். சிறப்புவாய்ந்த சிற்றாற்றை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையாகும். இதுகுறித்து பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முயற்சி செய்தும் தூர்வாரும் பணியை முழுமைப்படுத்த முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம், தாமிரபரணி தூய்மை இயக்கம், பல தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சிற்றாற்றை சுத்தப்படுத்தும் பணியை துவங்கி உள்ளது. கடந்த மே 29ம் தேதி துவங்கிய இந்த பணிகள், நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷின் கண்காணிப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. சிற்றாற்றை தூய்மைபடுத்துவதன் மூலம் குற்றாலம் முதல் சீவலப்பேரி வரையுள்ள ஏராளமான விளைநிலங்கள் கூடுதல் தண்ணீர் மற்றும் பாசன வசதி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படும். மழைக்காலங்களில் 148 குளங்களும் விரைவாக நிரம்புவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதுடன் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காண வாய்ப்பு உருவாகும். சிற்றாற்றை தூய்மைப்படுத்தும் பணிகள், முதற்கட்டமாக 5 கிமீ தொலைவிற்கும், 2வது கட்டமாக 20 கிமீட்டருக்கும், 3வது கட்டமாக எஞ்சியுள்ள பகுதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான இந்த பணி எந்தக் காரணம் ெகாண்டும் நின்று விடாமலும், அரசியல் குறுக்கீடுகள் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர். தற்போதே குற்றாலம், தென்காசி பகுதிகளில் ஆற்றை தூர்வாருவதில் பல சிரமங்கள் உள்ளன. குறிப்பாக குற்றாலம் அடிவெட்டான்பாறை பகுதியில் ஆற்றின் எல்கை எவ்வளவு அகலம் உள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. நில அளவைத் துறையினர் போதிய ஒத்துழைப்பு கொடுத்து தூய்மைப்படுத்தும் பணிகள் விரைவாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தூய்மை பணியில் ஈடுபடுபவர்களின் கோரிக்கையாக உள்ளது. தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிற்றாற்று வடிநில பகுதிகளில் நஞ்சை நிலமாக அதாவது நெல் பயிர்களை விளைவிக்கும் நிலமாகவும், அதற்கு அடுத்தாற்போல் உள்ள பகுதிகளில் தோட்டப் பயிர்கள் மற்றும் பணப் பயிர்களை விளைவிக்கும் விதத்திலும் ஆற்று நீர், ஊற்று நீர் ஆதாரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தாயார்தோப்பு மற்றும் அருந்தவப்பிராட்டியார் பகுதிக்கு இடையே ரூ.2 கோடி செலவில் சிற்றாறும், அனுமன் நதியும் சேருமிடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர கங்கைகொண்டான் அணைக்கு மேல்புறம் பிராஞ்சேரி அணைக்கு கீழ்புறம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மற்றொரு தடுப்பணை அமைப்பதற்கான திட்ட முன்வரைவு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்டை குளம், அழுதகன்னி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் நிறைவேறும்போது தடுப்பணைகளின் எண்ணிக்கை 21 ஆக உயரும். ஆனால் இந்த எண்ணிக்கை போதாது என்கின்றனர் விவசாயிகள். நதி பாயும் 80 கிலோமீட்டர் தூரத்தில் குறைந்தபட்சம் 2 முதல் 3 கிமீ தொலைவிற்கு ஒரு தடுப்பணையாவது கட்டப்பட வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும். சிற்றாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கற்கால சுவடுகள்
சிற்றாற்றின் இணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக் கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.
கோயிலுக்காக திசை மாறியது
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கட்டப்படுவதற்கு முன் அவ்விடத்தில் சிற்றாறு பாய்ந்தோடியது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு வேண்டினார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவன் கூறிய இடமோ சிற்றாறு செல்லும் இடத்தில் அமைந்தது. அதனால் ஆற்றை தெற்கு நோக்கி திசை திருப்பினான் பாண்டியன். பழைய சிற்றாறு சென்ற இடங்களில் இலஞ்சியிலும், தென்காசியிலும் சிற்றாற்று வீரியம்மன் கோயில் கட்டப்பட்டது.
கிளை நதிகள் இணைவது எங்கே?
ஐந்தருவியாறு காசிமேஜர்புரத்தில் சிற்றாருடன் இணைகிறது. கண்ணுப்புளி மெட்டு மேற்கு பகுதியில் உற்பத்தியாகும் மொட்டையாறு குண்டாறில் இணைகிறது. முண்டங்கோயில் மொட்டை பகுதியில் உற்பத்தியாகும் குண்டாறு அரகர நதியுடன் செங்கோட்டை நகர எல்லையில் இணைகிறது. புளியரை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அரிகர நதி தென்காசியில் சிற்றாற்றுடன் இணைகிறது. பழைய குற்றாலத்தில் உற்பத்தியாகி வரும் அழுதகன்னியாறு தென்காசி கடபோகத்தியில் சிற்றாற்றுடன் இணைகிறது. கருப்பாநதி அனுமன் நதியுடன் கலந்து வீரகேரளம் புதூரில் சிற்றாற்றுடன் இணைகிறது. இதுதவிர குற்றால மலைத்தொடரிலிலிருந்து வரும் உப்போடை நீரும் தென்காசியில் சிற்றாறுடன் கலக்கிறது.
கல்மண்டபங்கள் பராமரிக்கப்படுமா?
சிற்றாற்றங்கரையில் பல இடங்களில் மிகவும் பழமையான, அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த கல் மண்டபங்கள் உள்ளன. ஆனால் இவை முறையான பராமரிப்பின்றி பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. தூய்மை பணியின் ஒரு பகுதியாக சுமார் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பாரம்பரியமிக்க கல் மண்டபங்களையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
17 தடுப்பணைகள் மூலம் பாசனம்
சிற்றாற்றில் பாசன வசதிக்காக 17 தடுப்பு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக தலை அணைக்கட்டு மூலம் நேரடியாக 590 ஏக்கர் நிலமும், மறைமுகமாக 1467 ஏக்கரும், அடிவட்டாம்பாறை அணைக்கட்டு மூலம் நேரடியாக 114, மறைமுகமாக 157 ஏக்கர், வால்விழான்குடி அணைக்கட்டு மூலம் நேரடியாக 153, புலியூர் அணைக்கட்டு மூலம் நேரடியாக 381, மறைமுகமாக 911, பாவூர் அணைக்கட்டு மூலம் நேரடியாக 488, மறைமுகமாக 3110, திருச்சிற்றம்பலம் அணைக்கட்டு மூலம் நேரடியாக 163, மறைமுகமாக 163, மாறாந்தை அணைக்கட்டு மூலம் நேரடியாக 1361, மறைமுகமாக 2543, வீராணம் அணைக்கட்டு மூலம் நேரடியாக 231, மறைமுகமாக 2207, மானூர் அணைக்கட்டு மூலம் நேரடியாக 822, மறைமுகமாக 2678, மேட்டூர் அணைக்கட்டு மூலம் நேரடியாக 500, மறைமுகமாக 1027, பல்லிக்கோட்டை அணைக்கட்டு மூலம் நேரடியாக 250,
மறைமுகமாக 2135, உக்கிரன்கோட்டை அணைக்கட்டு மூலம் நேரடியாக 421, மறைமுகமாக 47, அழகியபாண்டியபுரம் அணைக்கட்டு மூலம் மறைமுகமாக 441, பிள்ளையார்குளம் அணைக்கட்டு மூலம் நேரடியாக 67, மறைமுகமாக 413, செழியநல்லூர் அணைக்கட்டு மூலம் நேரடியாக 68, மறைமுகமாக 373, மேட்டு பிராஞ்சேரி அணைக்கட்டு மூலம் நேரடியாக 344, மறைமுகமாக 409, கங்கைகொண்டான் அணைக்கட்டு மூலம் நேரடியாக 216, மறைமுகமாக 780 ஏக்கர் என மொத்தம் நேரடியாக 9ஆயிரத்து 963 ஏக்கரும், மறைமுகமாக 37 ஆயிரத்து 62 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
நிதி ஒதுக்க கோரிக்கை
தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் கூறியதாவது: முதல்வரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறேன். தென்காசி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான தனி மாவட்ட கோரிக்கையை முதல்வர் தற்போது நிறைவேற்றி வைத்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக அதிகமான கோரிக்கைகள், விவசாயம் தொடர்பாகத்தான் அளித்திருக்கிறேன். ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம், சிற்றாறு தூய்மைப்பணி திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் போன்றவற்றிற்கு தேவையான நிதி ஒதுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறேன். முதல்வரும் ஒவ்வொரு கோரிக்கையையும் உடனுக்குடன் பரிசீலித்து அதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் சிற்றாறு முழுமையாக சீரமைக்கப்படும் என்றார்.
