17 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் பேசியதாவது: பதினைந்தாவது பேரவையின் ஏழாவது கூட்டத் தொடரானது 28-6-2019 அன்று தொடங்கி 20-7-2019 வரை இன்று(நேற்று) வரை நடந்தது. பேரவை கூடிய 28 நாட்கள் (ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட) கூடியது. 7 நாட்கள் மாலையிலும் பேரவை கூடியது. மொத்தம் 162 மணி 18 நிமிடங்கள் அவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. இதில் 16 உறுப்பினர்கள் உரையாற்றியுள்ளனர். 9 மணி 46 நிமிடம் உரையாற்றப்பட்டுள்ளது.      மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 16 நாட்கள் நடந்துள்ளது. இதில் 129 உறுப்பினர்கள் உரையாற்றியுள்ளனர். 55  மணி 14 நிமிடம் உரையாற்றப்பட்டுள்ளது. 9-7-2018 முதல் 20-7-2019 வரை உறுப்பினர்களிடமிருந்து 13,552 வினாக்கள் வந்தது. 99 உறுப்பினர்கள் வினாக்களை அளித்தனர். இதில் 8,440 வினாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பெற்றவற்றில் முதல் 5 நிலைகளில், கே.எஸ்.மஸ்தான்(திமுக) 1913 வினாக்கள், க.அன்பழகன்(திமுக) 1565, துரை.சந்திரசேகரன்(திமுக)1513, முனைவர் கோவி.செழியன்(திமுக) 827, மு.பெ.கிரி(திமுக) 725 இடத்தை பிடித்துள்ளனர்.

அவையில் அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்களில் முதல் ஐந்து நிலைகளில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 22 வினாக்களுக்கும், மின்துறை அமைச்சர் 21 வினாக்களுக்கும், கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 18 வினாக்களுக்கும், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலா  16 வினாக்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் 14 வினாக்களுக்கும் விடையளித்துள்ளனர்.

விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- 42 அறிக்கைகளை அளித்துள்ளார். அனைத்து நாட்களிலும் 94 உறுப்பினர்கள் தவறாமல் அவையில் கலந்து கொண்டனர்.  முதல்வர், துணை முதல்வர் அனைத்து நாட்களிலும் கலந்து கொண்டு பேரவைக் கூட்டம் தொடங்கும் முதல் முடியும் வரையில் அனைத்து விவாதங்களிலும் கலந்து கொண்டுள்ளனர். பார்வையாளர்கள் மாடத்தில் மொத்தம் 13,777 பேர் அனுமதிக்கப்பட்டவர்கள். ஆண்கள்-10,839, பெண்கள்- 2,938 அடங்குவர்.இவ்வாறு அவர் பேசினார். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4.21 வரை தொடர்ச்சியாக நடந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார்.

தணிக்கை துறை பெயர் மாற்றம்:

நிதித் துறை மானியக் கோரிக்கையின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு:

*  திண்டுக்கல், காஞ்சிபுரம் மாவட்டக் கருவூலத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டப்படும்.

*  தணிக்கைத் தகவல் மேலாண்மை முறைமைத் திட்டச் செயலாக்கத்திற்கு தகவல் அட்டை (Data card) வழங்குதல். தணிக்கைத் தகவல் மேலாண்மை முறைமை எனும் இணையதளம் வழியாக இயங்கும் கணினி மென்பொருள் மூலம், தணிக்கை தொடர்பான தகவல்களை, தணிக்கையாளர்கள் நாள்தோறும் பதிவேற்றம் செய்யலாம். இதற்கு இணையதள வசதி அவசியமாகும். எனவே, கூட்டுறவுத் தணிக்கை துறை தணிக்கையாளர்களுக்கு ₹5 லட்சம் செலவில் தகவல் அட்டை வழங்கப்படும்.

*  கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு துறை செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.

*  அரசுத்துறை நிறுவன தணிக்கைத் துறையின் பெயர் “மாநில அரசு தணிக்கைத் துறை” என மாற்றம் செய்யப்படும்.

வளர்ச்சி இலக்கை அடைய துறை வாரியாக சிறப்பு பிரிவுகள்: துணை முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

*   மாவட்ட வாரியாகவும், வட்டார வாரியாகவும் நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளின் செயல்திட்டங்கள் சென்றடைந்த தொலைவினை கண்டறியவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட வாரியான பிரிவுகள் உருவாக்கப்படும்.

*  நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளுக்கான துறை வாரியான சிறப்பு பிரிவு அமைக்கப்படும்

*   மாநிலத்தின் பின்தங்கிய வட்டாரங்கள், ஏனைய வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் மாதந்தோறும் தரவரிசைப்படுத்தி, அதன் அடிப்படையில் சிறப்பாக செயல்படுபவனற்றை கண்டறிந்து ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.

துணை பட்ஜெட் தாக்கல் 6,862.71 கோடி நிதி ஒதுக்கீடு:

 சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

*   2019-20ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் இம்மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள் மொத்தம் 6,862.71. கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு கூடுதல் பங்கு மூலதன உதவி தொகையாக அரசு 1640 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

*   2006 மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் இருந்த கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு 253.39 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.

*  மாநில போக்குவரத்து கழகங்களின் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 3000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக அரசு 302.06 கோடி பங்கு மூலதன உதவியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

*  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தனது நிலுவை தொகைகளை செலுத்துவதற்காக வழிவகை முன்பணமாக அரசு 1000 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

*  மாணவர்களுக்கு வழங்கும் பேருந்து கட்டண சலுகைக்காக ஏற்படும் செலவை ஈடு செய்ய 508 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

4,860 கோடியில்  1.06 லட்சம் வீடுகள்:

சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

*  சென்னை சோழிங்கநல்லூர், நொளம்பூர், கொரட்டூர், ஜாபர்கான்பேட்டை, பரனூர், ஒசூர், திருப்பூர் முதலிபாளையம், கோவை சிங்காநல்லூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய  இடங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் 1,253 குடியிருப்பு அலகுகள் ₹349 கோடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும்.

*  காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் மற்றும் மதுரை மாவட்டத்தில் கூடல்புதூர், தோப்பூர்-உச்சப்பட்டி ஆகிய இடங்களில் 1,148 மனைகள் 48.21 கோடியில் மதிப்பில் உருவாக்கப்படும்.

*  சென்னையில் உள்ள கே.கே.நகர், திருவான்மியூர், நந்தனம் விரிவாக்கம், அண்ணாநகரில் உள்ள 3வது நிழற்சாலை, சிந்தாமணி வணிக வளாகம், 12வது பிரதான சாலை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் வாரியத்தின் நிதியினை கொண்டு 303 குடியிருப்பு அலகுகள் மற்றும் வணிக/அலுவலக வளாகங்கள் 150 கோடியில் கட்டப்படும்.

*   தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023ன் கீழ் குடிசைப்பகுதிகளற்ற நகரங்களை உருவாக்க 24 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 82 ஆயிரம் தனி வீடுகள் என 1.06 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள்/வீடுகள் 4,860 கோடி மதிப்பில் கட்டப்படும்.

Related Stories: