பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டதால் 1276 கோடி செலவினம் அதிகரித்துள்ளது

சென்னை: தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேறாமல் முடக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்து 276 கோடி ரூபாய் செலவினங்கள் அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கடைசி நாளான நேற்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது . இதில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழகத்தில் 134 திட்டங்கள் திட்டமிட்ட தேதிக்கு முடிவு பெறாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 276 கோடி ரூபாய் திட்டத்திற்கான நிதியில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் பேச  சபாநாயகர் அனுமதிக்கவில்லை:

அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, 17 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தீர்கள் என்றார். இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். துரைமுருகன் ஆவேசமாக பேச எழுந்தார். அவரை மு.க.ஸ்டாலின் சமரசப்படுத்தினார்.  தொடர்ந்து ஸ்டாலின் பேசும்போது, அவரது (ஜெயக்குமார்) தரத்தை காட்டுகிறது. அவ்வளவுதான் என்றார். தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேச முயன்றார். ஆனால், அவருக்கு பேச சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை.

 சபாநாயகர் பேசும்போது, “இன்று மதியம் 2 மணிக்குள் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதால் அமைச்சர்கள் யாரும் குறுக்கிட்டு பேச அனுமதி இல்லை” என்றார்.

சேலம் 8 வழிச்சாலை திட்டம் `விரைவு சாலை’ என மாற்றம்:

சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “8 வழித்தடசாலை அமைப்பதில் பிரச்னை உள்ளது. அந்த திட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை. போராட்டம் நடத்துபவர்களை அழைத்து பேச அரசு ஏன் தயங்குகிறது என்பதுதான் எங்கள் கேள்வி” என்றார். இதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிகளுக்கு உட்பட்டுதான் நிலம் எடுக்கிறோம். உங்கள் எம்பி கூட இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இது மத்திய அரசின் திட்டம். மாநில அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். இந்த சாலை, `விரைவு சாலை திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

வேலைவாய்ப்பு, படிப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு பயிற்சி பொதுத்துறை மானியக்கோரிக்கையின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

*  மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் புதிதாக “தமிழ்நாடு இல்லம் மற்றும் தமிழ்நாடு கலாச்சார மையம்”  அமைக்கப்படும்.

*  சென்னை அரசு விருந்தினர் மாளிகையில் புதிய உடற்பயிற்சி கூடம் 10 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

*  மதுரை மாவட்டத்தில் 88 லட்சம் செலவில் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய புதிய முன்னாள் படைவீரர் மையக் கட்டிடம் கட்டப்படும்.

*  முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்த 5542 பேருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவிகள் 7.69 கோடி கூடுதல் செலவினத்தில் உயர்த்தி வழங்கப்படும்.

*  முன்னாள் படைவீரர்களின்/ கைம்பெண்களின் ஒரு மகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண நிதியுதவி 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

*  வேலைவாய்ப்பு, படிப்பு மற்றும் பிற காரணங்களுக்காக அயல்நாடு செல்லும் தமிழர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

*  பின்தங்கியுள்ள நிலையில் உள்ள தாயகம் திரும்பியோர் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 500 வீடுகள் நகர்ப்புற பகுதிகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.

Related Stories: