கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

சென்னை: கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் சூழலை மேம்படுத்தும் விதமாக நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ் நடத்தும்  4வது சர்வதேச வர்த்தக மாநாடு கிண்டியில இன்று துவங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டிற்கு பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கட் அண்ணாமலை, பொருளாளர் ராம் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு விழாவினை தொடக்கி வைத்து பேசியதாவது:

தென்கிழக்கு ஆசியாவில் பல பகுதிகளில் அந்த நாட்டின் சின்னங்கள், கலாச்சாரங்கள் அந்த பகுதி நகரத்தார் மூலம் உருவாக்கப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோவிலை புணரமைத்தது தமிழர்கள் தான். நம் தலைமுறைக்கு பண்பும், பண்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.பிரதமர் மோடி சொல்வது போல் நம்மிடம் அனைத்து வகையான திறமைகள் இருப்பதால்தான் அடுத்து வரும் தலைமுறைக்கு விஷ்வ குருவாக விளங்க முடிகிறது

நம் நாட்டில் கல்வி, தொழில் திறன் ஆகியவற்றில் அரசு முன்னிலையில் இருக்கிறது.

இயற்கையாகவே நம் மரபணுவில் அந்த திறன் இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து தொழில் புரிபவர்கள் சட்டதிட்டங்களை மதித்து அதன் வழியே செல்வதால் தான் நம் திறமைகளை அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிக்கொண்டு வர முடிகிறது. வரி உள்ளிட்டவற்றை கவனமாக கையாள்வது மூலமும் நம் திறமை வெளிப்படும். தொழில் செய்ய அரசு உதவி  பற்றி பேசுவதை விட, அரசுடன் இணைந்து முறையான தொழில் பயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தொழில் செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பட்ஜெட்டில் தொழில் முறைவோருக்கு அதிகளவு பயன்கள் இடம் பெற்றுள்ளது. விவசாயம் குறித்து சுதந்திர நாட்டில் யார்  வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். கல்வியிலும், வேலை வாய்பிலும் என எதிலும், எங்கும் இந்தி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.  மோடி அரசில் ஸ்ரேஷ்ட பாரத் என்ற நிகழ்ச்சி மூலம் வட மாநிலத்திலும் தமிழ் கற்றுத்தரபடுகிறது.இவ்வாறு கூறினார்.

Related Stories: