சர்வர் கோளாறு காரணமாக புதிய மின்இணைப்பு வழங்குவதில் தாமதம்? இணையதளத்தில் விண்ணப்பிப்போர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் மின்வாரியத்தின் இணையதளம் மூலமாக புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு சர்வர் கோளாறை காரணம் காட்டி தாமதமாக இணைப்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெற, ஆங்காங்குள்ள மின் வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்குள், புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதி.

ஆனால், பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்களுடன், உரிய கட்டணத்தை செலுத்தினாலும், மின் இணைப்பை வழங்காமல் ஊழியர்கள், மக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தீர்வை ஏற்படுத்த மின்வாரியம் முயற்சித்தது. இதையடுத்து புதிய மின் இணைப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. பிறகு சம்மந்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்தேதி, வரிசை எண் போன்ற விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு ஆகும்.

எனவே, தேவை இல்லாமல், மக்களை அலைக்கழிக்க முடியாது. விண்ணப்பம் அளித்த, 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். மின் இணைப்பு வழங்க, மின் கம்பம் பொருத்த வேண்டி இருந்தால், 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் என்றால், 90 நாட்கள் அவகாசம் உள்ளது. ஆனால், விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும், சில இடங்களில் புதிய மின் இணைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாமதத்திற்கு சர்வர் கோளாறு காரணம் காட்டப்படுகிறது.

இதனால் புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போர் நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்து இணைப்பு கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெறுவதால் லஞ்சத்தையும், காலதாமதத்தையும் தவிர்க்க முடியும் என்ற நோக்கில் இணையதள சேவை தொடங்கி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது பொது மக்கள் மின்வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்து இணைப்பு கட்டணம் செலுத்தினால், உடனடியாக கட்டிய பணத்திற்கு இணைதளம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆனால் மின்வாரியத்தின் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படுவதில்லை. இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகே வாரியத்தின் கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் தாமதமாக செல்லும் பணம், மக்கள் எந்த தேதியில் செலுத்தினார்களோ அந்த தேதியிலேயே சில நாட்களுக்கு பிறகு வரவு வைக்கப்படுகிறது.

இவ்வாறு காலதாமதம் ஏற்படுவதற்கு சம்மந்தப்பட்ட இணையதள சர்வரில் பிரச்னை உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆன்லைனில் தாமதம் ஏற்படும் நேரத்தில் நேரடியாக வாரியத்திற்கு சென்று விண்ணப்பித்து, பணம் செலுத்துவோருக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் ஆன்லைனில் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போர் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னை அனைத்து இடங்களிலும் நடப்பதில்லை. ஒருசில இடங்களில் மட்டும் நடக்கிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: