மின்வாரியத்தில் பட்டியல் தயாராகிறது மாற்றுப்பணி ஊழியர்களுக்கு மீண்டும் வருகிறது களப்பணி

சென்னை: மின்வாரியத்தில் சொந்த பணியை தவிர்த்து மாற்றுப்பணியில் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களை மீண்டும் சொந்தப்பணியிடங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தமிழக மின்சாரவாரியத்தில் ஏராளமான களப்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வது, புதிய மின் இணைப்பு கொடுப்பது, பழுது சரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒருசிலர் மாற்றுப்பணி வாங்கிக்கொண்டு ஆங்காங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள்.

இதனால் களப்பணியில் சுணக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது மழைகாலம் துவங்கிவிட்டதால், ஆங்காங்குள்ள மின்பெட்டிகள், டிரான்ஸ்பார்மர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டிய நிலையில் வாரியம் உள்ளது. ஏற்கனவே காலிப்பணியிடம் இருக்கும் நிலையில் ஒருசில களப்பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு சென்றுவிட்டதால் இப்பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் பல்வேறு பணியில் இருக்கும் ஊழியர்கள் சிலர், மாற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவ்வாறு மாற்றுப்பணியில் உள்ளவர்கள் குறித்து வாரியம் ஆய்வு செய்து விபரம் சேகரித்துள்ளது. தற்போது அவர்களை சொந்தப்பணியிடத்துக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

களப்பணியாளர்கள் மாற்றுப்பணியில் இருப்பதால் பல்வேறு விதமான சிக்கல் ஏற்படுகிறது. எனவே அதுகுறித்து ஆய்வு செய்து, அவர்களை சொந்த பணியிடத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. களப்பணியாளர்கள் மட்டுமல்லாது அனைத்து மதிப்பீட்டாளர், மதிப்பீட்டு அலுவலர், எழுத்துத்துறை சார்ந்த பணி, தொழில்நுட்ப பணியாளர், பொறியாளர் ஆகியோருக்கு வழங்கபட்டுள்ள மாற்றுப்பணிகளை ரத்து செய்து விட்டு சொந்தப்பணியிடங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: