விடுதலை போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: விடுதலை போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளிட்டுள்ள அறிக்கை:

இராமசாமி படையாட்சியார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பெரும்பிடுகு முத்தரையர், சி.பா.ஆதித்தனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன், ஏ.டி.பன்னீர்செல்வம், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன், காலிங்கராயன், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சியில் சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்ட இந்த வரிசையில் விடுதலைப்போராட்ட வீரரும், இராஜரிஷி என்று போற்றப்பட்டவருமான அர்த்தநாரீச வர்மாவுக்கு இடமளிக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே, அர்த்தநாரீச வர்மா தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச வர்மாவின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளுக்கு இணையான வீரியம் கொண்டவை. தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு வித்திட்டதில் அர்த்தநாரீச வர்மாவின் பங்கு மகத்தானது.

கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மாவின் பணிகளுக்கும், சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. ராஜரிஷி அர்த்தநாரீச வர்மாவின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், திருவண்ணாமலையில் அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபமும், சேலத்தில் திருவுருவச்சிலையும் அமைக்க வேண்டும். அர்த்தநாரீச வர்மா அவர்களின் வரலாறு மற்றும் பாடல்களை பாடநூல்களில் சேர்ப்பது; தமிழ் மொழியில் சிறந்த கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா பெயரில் விருது வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு விடுதலைப் போராட்ட வீரரை கவுரவிக்கும் வகையில் சேலம் விமான நிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்டி, அவரது அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: