அதிகாரிகள் போல் நடித்து டாஸ்மாக் கடைகளில் மோசடி: ஊழியர்கள் புகார் கடிதம்

சென்னை: தமிழகத்தில் 5 ஆயிரத்து 152 மதுபான சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் ஆய்வை மேற்கொள்வது வழக்கம். இதற்கென சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டும் அவ்வப்போது ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களே வேறு மாவட்டங்களுக்கு அதிகாரிகள் போல் சென்று டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக ஊழியர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தவறுகளை தடுக்க திடீர் தணிக்கை மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி மற்றும் மதுரை மண்டலங்களில் போலி நபர்கள் ஆய்வு மற்றும் தணிக்கை என்ற பெயரில் மதுபான கடைகளில் பணம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 13ம் தேதி கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் சிலர் திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் போல் சென்று போலி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிலர் அதிகாரிகளின் உதவியுடன் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபான கடைகளில் தவறான வழியில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, மேலாண்மை இயக்குனர் மோசடி செயல்களில் ஈடுபட்டவர்கள் மேல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: