சட்டப்பேரவை துளிகள்

நல்ல பாம்பா, சாரை பாம்பா? பேரவையில் ருசிகரம்:

கீழ்பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி (திமுக): கோயம்புத்தூர் அருகில் ஒரு கால்நடை மருத்துவமனையில் ஒரு பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று செய்தி படித்தேன். அது நல்ல பாம்பா, சாரைப் பாம்பா, அந்த பாம்பு உயிருடன் இருக்கிறதா?

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பு சாரை பாம்பு. அது தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிருடன் உள்ளது. உடலில் இருந்த கட்டிகள் எல்லாம் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டிருக்கிறது. உறுப்பினர் அந்த பாம்பை பார்க்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறேன். பாம்பு விவாதத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

மேஜையை தட்டி முதல்வருக்கு வரவேற்பு:

சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு ெதாடங்கியது. கூட்டத்தில்  பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 9.58 மணியளவில் அவைக்கு  வந்தார். அவருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல்  சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட  அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மேஜையை தட்டி உற்சாக  வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு அவரும் எல்லா உறுப்பினருக்கும் நன்றி  தெரிவித்தார். நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதம் நடந்தது. இந்த துறையை கவனிப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  என்பதால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருப்பு கோட்டுக்கு அனுமதியில்லை:

சட்டப்பேரவை நடவடிக்கையை காண, கோவை தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று தலைமை செயலகம் வந்தனர். ஆசிரியர்கள் கருப்பு நிற கோட் அணிந்திருப்பதாகக் கூறி உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், அதை கழற்றி கையில் வைத்துக்கொண்டு செல்கின்றனர்.

கடல் சீற்ற பாதிப்பு கிராமங்களுக்கு பாதுகாப்பு தேவை:

குளச்சல் பிரின்ஸ் (காங்கிரஸ்) எழுந்து பேச முயன்றார். அவருக்கு  சபாநாயகர் அனுமதி வழங்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து தங்கள்  எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி  வழங்கினார். பிரின்ஸ் (காங்கிரஸ்): கடந்த 48 நாட்களாக அரபிக்  கடலில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள கடலோர கிராமங்களில் வீடுகள் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது. மக்கள்  அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.    அமைச்சர் ஜெயக்குமார்: கடல் அரிப்பை தடுக்க 111 கோடியில் பணிகளை  தொடங்கியுள்ளோம். அனைத்து கடலோர கிராமங்களின் அடிப்படை வசதிகளை  மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

சட்டப்பேரவையில் இன்று...

சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் கடைசி நாளான இன்று, காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் பொதுத்துறை, வீட்டு வசதி  துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விவாதம் முடிந்ததும் இறுதியில் துறைகளை கவனிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவிப்புகளை வெளியிடுவார். பிற்பகலில் அரசின் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும் நடைபெறும்.

Related Stories: