அத்தி வரதர் வைபவ விழா நெரிசலில் சிக்கி 4 பேர் பலி பாதுகாப்பு குறைபாடா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலின் அத்தி வரதர் வைபவ விழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடக்கிறது. உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 18 நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று திருவோணம் நட்சத்திர நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Advertising
Advertising

மதியம் 1 மணியளவில் திடீரென நெரிசல் ஏற்பட்டு, கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம் பகுதியில் 31 பேர் மயங்கினர். அவர்களை, போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சேலம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்த மருந்துக்கடை நடத்தி வரும் ஆனந்த வேலு (50), சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நடராஜன் (62), ஆவடியை சேர்ந்த திருமங்கலம் போலீஸ் எஸ்ஐ முத்துவின் மனைவி சாந்தி (எ) நாராயணி (55), ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த கங்காதேவி (எ) கங்காலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

நெரிசலை தடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் விஐபி மற்றும் விவிஐபிக்களை அழைத்து செல்வதில் மட்டுமே வேலை இருந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 3ம்தேதி கோயில் வளாகத்தில் போலீசார் தாக்கியதில் ஆந்திர இளைஞர் உயிரிழப்பு, நகருக்குள் ஷேர் ஆட்டோவிட மறுத்ததால் டிரைவர் தீக்குளிப்பு போன்றவை நடந்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற சம்பவம் நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

இதனிடையே அத்திவரதர் தரிசனம் செய்து விட்டு திரும்பிய 72 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தரிசனம் செய்து விட்டு  திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்

அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2.75 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: