‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்

புதுடெல்லி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதற்கான செயல் திட்டம் வகுக்க மத்திய அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நீக்கப்பட்டுள்ளார். அமித்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.  அவரே இந்த குழுவுக்கும் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான செயல் திட்டம் வகுக்கும் பணியை இந்த அமைச்சரவை குழு மேற்கொள்ளும். இந்த குழுவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் ரயில்வே  அமைச்சர் பியூஸ் கோயல், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை குழு இதற்கு முன்பு கடந்த 2017 ஜூனில் நியமிக்கப்பட்டது. அதில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த குழுவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தலைவராக இருந்தார். மற்ற நான்கு பேர்,  சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, எரிசக்தி மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல், சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர்  இடம்பெற்றிருந்தனர்.

Advertising
Advertising

 பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதியேற்ற பின்நர், இந்த அமைச்சர் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மோடியின் முதல் ஆட்சி காலத்தில், 2018ல் ஏர் இந்தியாவில் அரசின் 76 சதவீத பங்குகளையும் மேலாண்மை  கட்டுப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முதலீட்டாளர்களுக்கு அறிவித்தது. இருப்பினும், முதலீட்டாளர்கள், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர், அரசு தன் வசம் 24 சதவீத பங்குகளை வைத்துக் கொள்வது என்ற முடிவும், கடன், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அன்னியச் செலாவணி பரிவர்த்தனை விகிதம், தனிநபர் பெரும் அளவிலான முதலீடு செய்வது போன்ற  விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஏல முயற்சி தோல்வி அடைந்தது என கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான செயல் திட்டத்தை புதிய அமைச்சரவை குழு முடிவு செய்யும் என்று தெரிகிறது.இந்த முறை 100 சதவீத பங்குகளையும் விற்பதற்கு முடிவு செய்யப்படலாம் என்றும் இந்த விற்பனை  நடவடிக்கையை இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் அரசு உறுதியோடு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: