படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்: கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னை: படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்கும் மசோதாவை போக்குவரத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதாவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தாக்கல் செய்தார்.

அதன்படி, படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதிய வரிகளை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. அதாவது, இந்த மசோதா அமலுக்கு வந்தால், படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளில் உள்ள இருக்கைக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயும், படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு மாதம் 2500 ரூபாயும் வரி விதிக்கப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த வரியை செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியும். இந்த வரியை செலுத்துவதற்கான நடைமுறைகளும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கணிசமான அளவில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு பயணிகளிடையே உள்ள நிலையில் இம்மசோதா மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: