அமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு

மன்னார்குடி: அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறுவதால் சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்தபடி சம்மந்தப்பட்ட ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி கோட்டூர் காவல்நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,   கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா   நிறுவனத்துக்கும், மத்திய அரசின் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஐஓசி,  ஆகியவற்றுக்கும் அனுமதி அளித்து உள்ளது. இந்த நிறுவனங்கள் பணிகளை  தொடங்கினால், டெல்டா மாவட்ட விவசாயம் அடியோடு அழிந்து விடும்.  குடிநீர் பஞ்சம் ஏற்படும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  இதற்காக  பல்வேறு  போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம், தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் ேபசுைகயில் ``ஹைட்ரோ  கார்பனுக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து ஒரு கொள்கை முடிவு எடுத்து  அறிவிக்க வேண்டும்’’ என்று  கேட்டுக் கொண்டார். இதற்கு  சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ``தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்   திட்டம் தொடங்க, ஆய்வு செய்ய, உற்பத்தி செய்ய  வேண்டும் என்றால் தமிழக  அரசிடம் அனுமதி பெற வேண்டும். எனவே,  கொள்கை முடிவு  எடுக்க வேண்டிய அவசியம்  இல்லை. அதையும் மீறி ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை  கொண்டு வந்தால் கிரிமினல்  நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது’’  என்று பதில் அளித்தார். இதற்கு டெல்டா  விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் 20 விவசாயிகள் நேற்று காலை கோட்டூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்  அறிவழகனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
Advertising
Advertising

அதில், `அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் பணிகளை செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சட்டசபையில் கூறி உள்ளார். ஆனால், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சோளங்கநல்லூர், பெரியகுடி ஆகிய  இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் பணிகளை, தமிழக அரசின் அனுமதியின்றி செய்து வருகிறது. எனவே இதற்கு பொறுப்பான அதிகாரியை கைது செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கோட்டூர் அருகே சோளங்கநல்லூர், பெரியகுடி ஆகிய 2 இடங்களில் மாசுக்கட்டுவாரிய அனுமதியில்லாமல் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், எஸ்.பி. துரையிடம் பேசினார். ஆனால் மனுவுக்கு ரசீதும் கொடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வழக்கு பதிவு செய்யும் வரை போலீஸ்  நிலையத்தை விட்டு செல்ல மாட்டோம் என கோட்டூர் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.இதுகுறித்து மீண்டும் மாவட்ட எஸ்பிக்கு தெரிவிக்கப்பட்டது. எஸ்பி துரை உத்தரவின்பேரில் டிஎஸ்பி இனிகோதிவ்யன் காவல்நிலையத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில் மன்னார்குடி வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேசி முடிவு செய்யலாம் என்று கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.முன்னதாக, அனைத்து விவசாயிகள் சங்க போராட்டக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், `சட்டத்துறை   அமைச்சர்  கூறிய கிரிமினல் நடவடிக்கையை விவசாயிகள் வரவேற்கிறோம். டெல்டா   மாவட்டங்களில் உள்ள விவசாயிகள்   அமைச்சரின் அறிவிப்புபடி  கிரிமினல்  நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார்   கொடுத்துள்ளோம். நானும் கோட்டூர் போலீசில் புகார் செய்துள்ளேன்.   போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று  சொன்னார்.

Related Stories: