குன்றத்தூர் அடுத்த கோவூரில் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் நிறுத்தம் : பயணிகள் கடும் அவதி

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள பேருந்து நிலையம் அதிகாரிகள் மெத்தனத்தாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. குன்றத்தூர்-போரூர் பிரதான சாலையில் கோவூர் பேருந்து நிலையம் உள்ளது. தினமும் இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு என ஆயிரக்கணக்கானோர் அரசு பேருந்துகளில் சென்று வருகின்றனர். பொதுமக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு கோவூரில் பல லட்சம் செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தி வந்த இந்த பேருந்து நிலையம் தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துள்ளது. தற்போது போரூர்-குன்றத்தூர் சாலை விரிவாக்க பணியும் பல ஆண்டாக மந்தகதியில் நடந்து வருவதால் சாலைகள் தோண்டப்பட்டதை காரணம் காட்டி பஸ் நிலையத்துக்குள் அரசு பேருந்துகள் வர மறுக்கின்றன. இதனால் பயணிகள் அரசு பேருந்தில் ஏறுவதற்காக குன்றத்தூர்-போரூர் பிரதான சாலையில் கடும் வெயில் மற்றும் மழையில் காத்துக்கிடந்து அவதிப்படும் அவலம் உள்ளது.

இவ்வாறு பேருந்திற்காக சாலையில் காத்துக்கிடக்கும் பயணிகள் மீது, அவ்வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் மோதி அவ்வப்போது சிறுசிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் வராததை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள தனியார் ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து, 24 மணி நேரமும் கார் பார்க்கிங் இடமாக மாற்றி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல லட்சம் செலவில் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய  இந்த கோவூர் பேருந்து நிலையம் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தின் உள்ளே போதிய தெருவிளக்குகள் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பேருந்து நிலையம் மாறி வருகிறது. இதை கருத்தில் கொண்டு பல லட்சம் செலவில் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கோவூர் பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருக்கும் தனியார் வாகனங்களை முறையாக அப்புறப்படுத்தி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையத்தை வழங்க வேண்டும் என்று பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தின் உள்ளே போதிய தெருவிளக்குகள் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பேருந்து நிலையம் மாறி வருகிறது

Related Stories: