பிளாஸ்டிக் ஆய்வின்போது வெளிவந்த பகீர் தகவல் 3,247 கடைகளுக்கு லைசென்ஸ் இல்லை

* 7 நாட்களுக்குள் லைசென்ஸ் பெறாவிட்டால் கடைகளுக்கு சீல்

* மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆய்வின்போது சென்னை மாநகராட்சியில் 3,247 கடைகள்  தொழில் உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 7 நாட்களுக்குள்  உரிமம் வாங்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும் பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சட்டதிருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 559.49 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ₹1.78 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இதவரை 245 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ₹45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்களை ஸ்ரீபெரும்புதூர் மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பி எண்ணெயாகவும்,  சாலை போடுவதற்கும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் பிளாஸ்டிக் ஆய்வின்போது சென்னை மாநகராட்சியில் 3,247 கடைகள் தொழில் துறை உரிமம் இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளளது. சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி கடைகளுக்கு அபராதம் விதிக்கும் போது அந்த கடையின் தொழில் உரிமம் எண் மற்றும் முகவரியை அபராத பில்லில் குறிப்பிட வேண்டும். அதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கடை உரிமையாளர்களிடம் தொழில் உரிமம் கேட்டுள்ளனர். அவ்வாறு கேட்டபோது 3,247 கடைகள் தொழில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்து. இதனைத் தொடர்ந்து இந்த கடைகள் தொடர்பாக விவரங்களை  சுகாதாரத் துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இந்நிலையில் தொழில் உரிமம் இல்லாத அனைத்து கடைகளும்  7 நாட்டுகளுக்குள் தொழில் உரிமம் பெற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 63 ஆயிரம் கடைகள் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 63 ஆயிரம் கடைகள் தொழில் உரிமம் பெற்று செயல்பட்டுவருகிறது. 500 முதல் 12,500 வரை தொழில் உரிம கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹17 கோடி வருமானம் கிடைக்கிறது.

Related Stories: