சோளம் உற்பத்தி வீழ்ச்சியால் பிராய்லர் கோழி உரிமையாளர்கள் பாதிப்பு இறக்குமதி சோளத்துக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: தமிழகத்தில் சோளம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பிராய்லர் கோழி  உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இறக்குமதி செய்யும் சோளத்துக்கு  முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர்  எடப்பாடி  கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:கோழி வளர்ப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் பிராய்லர் கோழி வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த 2017-2018ம் ஆண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் கோழி  இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2013-2014ம் ஆண்டில் 23.5 சதவீதமாக இருந்த முட்டை உற்பத்தி 2017-2018ம் ஆண்டில் 30.53 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பிராய்லர் கோழி உற்பத்தி செய்வதில் தமிழகம் 4வது இடத்திலும், முட்டை உற்பத்தியில் 2வது இடத்திலும் உள்ளது. கோழிகளுக்கான தீவனத்தில் 47 சதவீதம் சோளம் தான் பயன்படுத்தப்படுகிறது.

அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் பூச்சி தாக்குதல் காரணமாக 2018-2019ம் ஆண்டில் மொத்தம் பயிரிடப்பட்ட 3.55 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான சோளத்தில் 2.20 லட்சம் ஹெக்டேர் சோளம்  அழிந்து போனது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பூச்சி தாக்குதல் காரணமாக சோளம் உற்பத்தி குறைந்தது. இதன்காரணமாக சோளத்தின் விலை உச்சத்துக்கு சென்றுள்ளது. இதனால், கோழி தீவனத்துக்காக சோளம்  கிடைக்காமல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சோளத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இறக்குமதி சோளத்துக்கு முழுமையாக  வரிவிலக்கு பெற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநிலை நீடித்தால் முட்டை, கோழி இறைச்சி உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கோழிப்பண்ணைக்கு மாதம் ஒன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சோளம் தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு இன்னும் 5  மாதத்துக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் சோளம் தேவைப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி இறக்குமதி சோளத்துக்கு முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: