மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா பிறந்தநாளையொட்டி, அவரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்.சங்கரய்யாவின் 98வது பிறந்தநாளையொட்டி நேற்று காலை சென்னை, குரோம்பேட்டையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அத்துடன், என்.சங்கரய்யாவின் 98வது பிறந்தநாளையொட்டி, வாழ்த்துச் செய்தியையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பழுத்த அனுபவமுள்ள மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தலைவர் பெரியவர் என்.சங்கரய்யாவுக்கு 98வது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கடலாகக்  காட்சியளிப்பவர். ஏழை-எளிய அடித்தட்டு மக்களின்- உழைக்கும் பாட்டாளிகளின்  உரிமைக்குரலாக ஒலிப்பவர். நேர்மையான அரசியலின் நிலைக்கண்ணாடியாகப்  பொதுவாழ்வில் திகழ்பவர்.

பொதுவாழ்விற்குத் தேவையான அருங்குணங்களைப் பெற்றவருக்கு 98வது பிறந்த நாள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.தலைவர்  கலைஞருடனும், திமுகவுடனும் மிகுந்த நட்பு பாராட்டி-இன்றைக்கும் தோழமையின் சிகரமாக விளங்குபவர். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-திமுக உறவு, அரசியல் ரீதியான உறவு ஆகியவற்றையெல்லாம் தாண்டியது எங்கள் இருவரது நட்பு”  என்று தலைவர் கலைஞருடனான தனது நட்பு பற்றி சங்கரய்யா ,ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் நிலைத்து நிற்கிறது.சங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு தனிச்சிறப்பு என்பது மட்டுமின்றி-நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு  என்றே கருதுகிறேன். அய்யா அவர்கள் நூற்றாண்டையும் கடந்து  நீடூழி வாழ வேண்டும்;  வழிகாட்ட வேண்டும் என்று வணங்கி, வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிகழ்வின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: