டெபிட்கார்டு, வங்கிக்கணக்கு விவரம் கேட்டா தராதீங்க... மோசடியில் பணம் பறிகொடுத்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை பறிகொடுத்ததில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது எனமத்திய அரசு புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. நான் பேங்க் மேனேஜர் பேசறேன்... உங்க கார்டு பிளாக் ஆயிடுச்சு. அதை ஆக்டிவேட் பண்ண கடைசி 4 நம்பர் சிவிவி நம்பர் போதும். அப்புறம், உங்க மொபைலுக்கு பாஸ்வேர்டு வரும் அதை சொன்னால் வேறு கார்டு ரெடி..’’ என்று போன் அழைப்பு வருவது சகஜம் ஆகிவிட்டது.  உண்மையில் இதெல்லாம் வங்கியில் இருந்து வருவது கிடையாது. வடமாநிலத்தில் இருந்துதான் பெரும்பாலும் இத்தகைய அழைப்புகள் வருகின்றன. ஆனால், சந்தேகமே வராத அளவுக்கு தமிழில் சரளமாக பேசகின்றனர். கார்டு பிளாக் ஆகி விட்டதா என்று பதைபதைக்கும் மக்களிடம், நைசாக பேசி கார்டு நம்பர், பாஸ்வேர்டு வாங்கி ஆன்லைனில் பரிவர்த்தனை செய்து வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவி விடுகின்றனர். அதன்பிறகு மொபைல் நம்பருக்கு அலர்ட் வந்த பிறகுதான், பணத்தை பறிகொடுத்தவர் அலர்ட் ஆவார்.

இப்படி ஆன்லைன் மோசடியில் கிரெடிட், டெபிட்கார்டு, ஆன்லைன் வங்கி மோசடியில் பணத்தை இழந்தது தொடர்பாக நிதியமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. கடந்த 2016-17 தொடங்கி 2018-19 வரை 3 நிதியாண்டு புள்ளி விவரங்களின்படி, அதிக மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததில் தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. மேற்கண்ட 3 ஆண்டுகளில் மொத்தம் 56 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர். இதில் 2016-17ல் 4 கோடி, 2017-18ல் 41 கோடி, 2018-19ல் 11 கோடி அடங்கும். மகாராஷ்டிரா (46 கோடி), ஹரியானா (31 கோடி), கர்நாடகா (18 கோடி), டெல்லி (18 கோடி) என பிற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதுபோல், மோசடி எண்ணிக்கையில் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது இங்கு 2016-17ல் 208, 2017-18ல் 222, 2018-19ல் 214 புகார்கள் என மொத்தம் 644 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,745 புகார்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 948 புகார்களுடன் ஹரியானா 2வது இடத்திலும் உள்ளது என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

பிரத்யேக மொபைல் ஆப்

வங்கி விவரங்களை கேட்டு போன் செய்பவர்கள், ஸ்மார்ட் போனில் பதிவு செய்து வைத்துள்ள வங்கி விவரங்களை திருடுவதற்கு வசதியாக பிரத்யேக ஆப்சை உருவாக்கியுள்ளனர். இத்தகைய ஆப்ஸ்கள் அந்த மொபைலில் பதிவாகியிருக்கிறதா என்பதை வங்கியில் இருந்து பேசுவது போல் உறுதிசெய்து கொண்டு மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

மூத்த குடிமக்களை குறிவைத்து மோசடி

தற்போது பெரும்பாலானோர் ஆன்லைன் வங்கிச்சேவையை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் சில அப்பாவி மக்கள் வங்கியில் இருந்து அழைப்பு வருகிறது என்றவுடன் கார்டு நம்பர் உள்ளிட்டவற்றை கூறி ஏமாந்து விடுகின்றனர். இவ்வாறு மோசடி போன் அழைப்பு செய்பவர்கள் மூத்த குடிமக்களைத்தான் எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். இவர்களில் பலர் தொழில்நுட்பம் அறியாதவர்களாக, விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளதால் இவர்களை  குறிவைத்து மோசடிகள் அரங்கேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories: