கட்சி தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: “கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை இருக்க தான் செய்யும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். தமிழக  பொறுப்பாளர் பாத்திமா ரோஸ்னா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ யசோதா, மகளிர் அணி துணை தலைவர்கள் கோவை  கவிதா, சேலம் சாரதா தேவி உள்பட மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  ராகுல்காந்தி இடத்தில் இன்னொரு தலைவர் அமர்ந்து அந்த பணியை செய்வது சிரமம் என்று நானே உணர்கிறேன். ராகுல்காந்தி இந்த பிரச்னைக்கு ஒரு  முடிவு கட்டுவார்.

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை இருக்க தான் செய்யும். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை சீட்  கேட்பதாக எந்த தகவலும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: