நிலம் வாங்கி 3 ஆண்டாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கிடப்பில் துணை மின்நிலைய பணி

* பொதுமக்கள் கடும் அவதி * உடனே துவக்க கோரிக்கை

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க 1.35 கோடியில் நிலம் வாங்கி 3 ஆண்டாகியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் கிடப்பில் கிடக்கிறது. இதனால் குறைந்த அழுத்த  மின்சாரத்தினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதியில் சுமார் 15 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த பயனாளிகளுக்கு ஆவடி, சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையம் மூலம் பல ஆண்டாக மின் விநியோகம் செய்யப்பட்டு  வருகிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், மிக்சி  உள்ளிட்ட மின் சாதன சாதனங்களை பயன்படுத்துவதால் மின் தேவை அதிகமாகிறது.ஆனால் தற்போதுள்ள துனை மின் நிலையம் மூலம் குறைவாக மின் சப்ளை தான் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட பல நகர்களில் குறைந்த அழுத்த மின்சாரம் தான் நிலவி வருகிறது. இதனால் மின் சாதன பொருட்கள் அடிக்கடி  பழுதாகி வருகின்றன.மேலும் கோடை காலத்தில் ஏசி, மின் மோட்டார்கள் சரி வர இயங்குவதில்லை. குறைந்த அழுத்த மின்சாரத்தினால் மாணவ, மாணவிகள் படிக்க முடிவதில்லை. நகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை செய்ய திருமுல்லைவாயல் பகுதியில் பல  இடங்களில் மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.

இந்த மின் மோட்டார்கள் குறைந்த அழுத்த மின்சாரத்தினால் பல இடங்களில் சரிவர இயங்குவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட மின்சார பிரச்சனைகளுக்கு தீர்வு காண  திருமுல்லைவாயலில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். இதன்படி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமுல்லைவாயல், தென்றல்  நகர் மேற்கு பகுதியில் உள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான (சர்வே எண் 344/1) 50 சென்ட் நிலத்தை ₹1.35 கோடிக்கு மின்சார வாரியம் விலைக்கு வாங்கியது.இதையடுத்து துணை மின்நிலையம் அமைக்க ₹14 கோடி மதிப்பீடு செய்து மின்சார வாரிய பொறியாளர்கள் அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பினர். ஆனால் அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் நிலம் வாங்கி 3 ஆண்டுகளாக பணி கிடப்பில்  போடப்பட்டுள்ளது. இதனால் இந்த இடத்தில் சமூக விரோதிகள் கட்டிட இடிப்பாடுகளை கொட்டியும், வாகனங்களை விட்டும் ஆக்கிரமித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் துணை மின்  நிலையம் அமைக்க நடவடிக்கை  எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து குறைந்த மின் அழுத்தத்தை போக்க துணை மின் நிலைய பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: