சட்ட விரோத பேனர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை திருப்தியில்லை: உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பேனர்கள் அகற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் வழங்க கோரி தமிழக அரசு சார்பில் நேரம் கோரப்பட்டது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சாதாரண அப்பாவி மக்கள் தவறு செய்தால் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசு தண்டனை பெற்றுக்கொடுக்கிறது. அதே தவறை அரசியல்வாதிகள் செய்தால் மட்டும் அரசு கால அவகாசம் கேட்பது ஏன்? என கேள்வி எழுப்பி, பேனர் விவகாரத்தில், அரசின் செயல்பாடுகளால் நாங்கள் சோர்வடைந்து விட்டோம் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி, சட்டவிரோத பேனர்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஆனால் அரசு கொண்டு வந்த சீர்திருத்தத்தை எதிர்த்து  பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாகவே துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்ட விரோத பேனர்களை தடுப்பது அரசின் வேலை. நீதிமன்றத்தின் வேலை இல்லை. அரசுதான் தடுக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபிக்கள் சார்ப்பில் வைக்கப்படும் பேனர்களை இப்போதும் பார்க்க முடிகிறது என்றனர். உடனே, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: