ஆபத்தான முறையில் குடிநீர் நிரப்பும் மானூர் அரசு பள்ளி மாணவர்கள்

மானூர்: நெல்லை மாவட்டம் மானூரில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக அரசு உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. மேல்நிலை வகுப்புகளுக்காக மானூர் ஊருக்கு வடக்குப் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வகுப்பறைகளும் ஆய்வு கூடங்களும் திறக்கப்பட்டுள்ளது. ஊரில் இருந்து ஒதுக்குபுறமான இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு மாணவிகளை அனுப்ப பெற்றோர் மறுத்து விட்டதால் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. பள்ளி கட்டும்போது போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தற்போது விலைக்கு வாங்கி தண்ணீர் பயன்படுத்தும் நிலைமை உள்ளது. அவ்வப்போது ஆசிரியர்கள் ஏற்பாட்டில் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பள்ளி சின்டெக்ஸ் டேங்கில் நிரப்பி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை மானூர் அரசு பள்ளிக்கு வந்த டிராக்டரில் இருந்து பைப்லைன் மூலம் பம்ப் செய்யப்பட்ட தண்ணீரை மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் சின்டெக்ஸ் டேங்கில் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். இப்பகுதியில் காற்று பலமாக வீசி வரும் நிலையில், ஈரடுக்கு மாடியின் சுவர் விளிம்பில் உள்ள டேங்கில் பாதுகாப்பின்றி மாணவர்கள் தண்ணீரை நிரப்பும் பணியில் ஈடுபட்டது, அவ்வழியாக சென்றோரை பதறச் செய்தது. இனிவரும் நாட்களில் இதுபோன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை பள்ளி நிர்வாகம் தவிர்க்க வேண்டுமென்றும், ஆழ்துளை குழாய்க்காக அமைக்கப்பட்டுள்ள பைப்லைனில் தனி வசதி ஏற்படுத்தி டிராக்டர் தண்ணீரை சின்டெக்ஸ் தொட்டிக்கு அனுப்ப கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோரும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்

Related Stories: