தங்கதமிழ்ச்செல்வன் பெட்டிப் பாம்பு: விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார்,..டி.டி.வி.தினகரன் பதிலடி

சென்னை: தங்கதமிழ்ச்செல்வன் சொன்ன மாதிரி விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார். என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். கட்சியில் அவர் விரைவில் நீக்கப்படுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். அதிமுகவுக்கு எதிராக அமமுக என்ற தனிகட்சியை துவக்கிய டிடிவி தினகரன் சந்தித்த முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்லேயே படுதோல்வியை சந்தித்தார். சட்டசபை இடைத்தேர்லில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. குறிப்பாக ஓபிஎஸ் மகன் ேபாட்டியிட்ட தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் படுதோல்வி அடைந்தார். ேதர்தலுக்கு முன்பும் பின்பும் பலர் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு சென்றுவிட்டனர்.

இந்த சூழ்நிலையில், டி.டி.வி.தினகரனை தங்கதமிழ்ச்செல்வன் கடுமையாக எச்சரிக்கை விடும் வகையில் பேசிய ஆடியோ நேற்று முன்தினம் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அதில், “டி.டி.வி.தினகரன் பொட்டத்தனமான அரசியல் நடத்துவதாகவும், நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்துபோவார்” என்றும் கடுமையாக எச்சரிக்கை விடும் வகையில் தங்கதமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.இந்தநிலையில் தேனி மாவட்ட அமமுக முக்கிய நிர்வாகிகள் நேற்று சென்னை அடையாரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு வந்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிந்ததும், தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:  அமமுக புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். முதல் முதலாக கட்சியில் யாரையும் நீக்க வேண்டாம் என்பதால்தான் தங்கதமிழ்ச்செல்வன் நீக்கம் தள்ளி போகிறது. யாரையும் கட்சியை விட்டு நீக்குவதற்கு எந்தவித அச்சமோ, பயமோ, தயக்கமோ எனக்கு இல்லை. ஜூலை முதல் வாரம் தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். அதற்குள், பெங்களூரு சென்று சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்படும்.

தங்கதமிழ்ச்செல்வன் வேறு கட்சிக்கு போறதுக்கு எந்த தடையும் இல்லை. நீங்கள் பேசுவதெல்லாம் சரியில்லை என்று ஏற்கனவே பலமுறை அவரிடம் எச்சரித்துள்ளேன். அவர் சொன்ன மாதிரி விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார். என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். விரைவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகி நியமிக்கப்படுவார். கட்சி நிர்வாகிகளும், அவரது பேச்சு, செயல்பாடுகள் சரியில்லை என்று என்னிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். நானும், பொறுமையாக இருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி வந்தேன். ஏற்கனவே அவரிடம் நான் சொல்லியுள்ளேன். இதுபோன்று பேட்டி அளித்தால் கட்சியில் இருந்து தூக்கி விடுவேன் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர் எனக்கு எப்படி அட்வைஸ் பண்ண முடியும். அவர் ஒரு முடிவு எடுத்து விட்டார். அதனால்தான் இப்படி பேசி வருகிறார்.

18 எம்எல்ஏக்கள் நீக்கம் விஷயத்தில் கூட மற்றவர்கள் ஒன்று சொன்னால் இவர் மட்டும் ஒன்று கூறுவார். என்னிடம் நேராக எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் வெளியில் இஷ்டத்துக்கு பேட்டி கொடுப்பார். அப்போதுகூட ரொம்ப நாளா அவரை கூப்பிட்டு எச்சரிக்கை செய்துள்ளேன். என்னை தாக்கி பேச யாரோ அவருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். அதை அவர் நிறைவேற்றி வருகிறார். சபாநாயகர் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், தீர்மானத்துக்கு ஆதரவாகத்தான் நாங்கள் வாக்களிப்போம். எங்கள் 18 எம்எல்ஏக்களை நீக்கம் செய்தவர் சபாநாயகர் தனபால். கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய 3 ஆதரவு எம்எல்ஏக்கள் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது சட்டமன்றம் கூடும்போதுதான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

தங்கதமிழ்செல்வன் சவால்

இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘‘என்னை பிடிக்காவிட்டால், கட்சியில் இருந்து நீக்குங்கள். கட்சியை பற்றி பேசியது உண்மைதான். அதற்கு என்னை அழைத்து கண்டித்திருக்க வேண்டியது தானே. சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது. அமமுக நிர்வாகம் சரியில்லை என நான் பேசியது உண்மைதான். கோவை, நெல்லை மண்டல பொறுப்பாளர்களால் கட்சி அழிந்துவிட்டது’’ என்றார்.

Related Stories: