சிறுபான்மையினர் மீது தாக்குதலா? அமெரிக்கா அறிக்கையை நிராகரித்தது அரசு

புதுடெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அதிகளவில்  தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்காவின் மதச் சுதந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சர்வதேச மதச் சுதந்திரத்தின் ஆண்டறிக்கையை (2018) அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்டது. அதில் பாகிஸ்தான், சீனா, இந்தியா உட்பட பல நாடுகளில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள் அதிகளவில் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு 3ல் ஒரு பங்கு மாநில அரசுகள் மதமாற்ற தடுப்பு சட்டத்தையும்,  பசுவதை தடை சட்டத்தையும் அமல்படுத்தியுள்ளன. இதன் மூலம், பசு பாதுகாவலர்கள்  என்ற இந்து அமைப்பினர், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்  நடத்தியுள்ளனர். கட்டாய மதமாற்றம் என்ற  குற்றச்சாட்டின் பெயரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.  ஆனால், இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை இருப்பதால் சிறுபான்மை  சமுதாயத்தினருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற தன்மையை எண்ணி பெருமைப்படுகிறோம். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயங்கள், நீண்ட காலமாக சகிப்புத்தன்மையுடன் வசிக்கின்றன. இங்குள்ள அரசியல் சாசன சட்டம், மதச் சுதந்திரத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பது உலகறிந்த விஷயம். இங்குள்ள ஜனநாயக நிர்வாகமும், சட்ட விதிமுறைகளும், அடிப்படை உரிமைகளை பாதுகாக்கின்றன. நமது மக்களுக்கு அரசியல் சாசனப்படி அளிக்கப்படும் பாதுகாப்பு உரிமை பற்றி கருத்து தெரிவிக்க வெளிநாட்டு அரசுகளுக்கு சட்ட உரிமையில்லை,’’ என்றார்.

Related Stories: