சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஊழலுக்கு துணைபோகிறார்’ விழுப்புரம் கலெக்டர் மீது துணை ஆட்சியர் சரமாரி புகார்

விழுப்புரம்: நிர்வாகம் சீர்கெட்டதற்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்தான் காரணம் என்று விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரமாரி புகார் கூறியுள்ளார். விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர்(துணை ஆட்சியர்) குமாரவேல் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். 9 மாதங்களே ஆனநிலையில் அவர் திடீரென்று சில நாட்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இடமாற்றம் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், நேற்று அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல வருவாய் கோட்டாட்சியர்கள் பொதுஇடமாறுதல் செய்யப்பட்டனர். என்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்கள். இது பழிவாங்கும் நோக்குடன் நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் சதி செய்து என்னை இடமாற்றம் செய்துள்ளனர்.

இதற்கு காரணம் அடுக்கிக்கொண்டெ செல்லலாம். தாசில்தார் பொறுப்பில் உள்ள எனது நேர்முக உதவியாளர் கணேசன் அலுவலக பணிகளை சரியாக செய்யாமல், கோப்புகளை தேக்கி வைத்துவிட்டார். சொல்லாமல் திடீரென்று 30 நாட்கள் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துவிட்டுச் சென்றார். நான் முறையற்ற விண்ணப்பம் என்று நிராகரித்தேன். ஆட்சியரிடம் அவர் சென்று முறையிட்டபோது என்னிடம் விளக்கம் கேட்கிறார்கள். சட்டப்படி நான் நடவடிக்கை எடுக்கும்போது இதனை கேட்பதற்கு ஆட்சியருக்கு என்ன அதிகாரம் உள்ளது. எனது வேலைகளை சுதந்திரமாக செய்யவிடவில்லை. எல்லாவற்றிலும் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் தலையீடு இருந்தது. ஏன் தேர்தல் பணிகளின்போதும் ஆட்சியர் தலையீடு அதிகமாக இருந்தது. இதனால் என் பணிகளை நேர்மையாக செய்யமுடியவில்லை.

இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை புகாராக எழுதி தலைமை செயலாளருக்கு, கலெக்டர் மூலமாகவே அனுப்பமுடிவு செய்து அந்த தபாலை அவருக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் அனுப்பாமல் அவரே வைத்துக்கொண்டார். பின்னர் மீண்டும் தலைமைச் செயலாளருக்கும் இந்த மனுவை எழுதி அனுப்பினேன். இதன் விளைவுதான் நான் பழிவாங்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றப்பட்டுள்ளேன். எனவே, மாவட்ட கலெக்டர், மாவட்டவருவாய் அலுவலர் பிரியா ஆகியோரை இடமாற்றினால்தான் விழுப்புரத்துக்கு நல்லகாலம் பிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் சுப்ரமணியனை தொடர்புகொண்டு கேட்டபோது, `வருவாய்கோட்டாட்சியரை இடமாற்றம் செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தமிழகம் முழுவதும் பொதுஇடமாறுதல் நடந்துள்ளது. கோட்டாட்சியர் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்லவிருப்பமில்லை, நான் சொல்லவும் கூடாது. அரசுஉயர்பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி பேசுவது சட்டப்படி தவறு’ என்று பதில் அளித்தார்.

குண்டாஸ் வழக்கை விசாரிக்கவே விடவில்லை...

ஆர்டிஓ குமாரவேல் கூறுகையில், `குண்டர்சட்டம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் எனது மேஜையில் வந்தால். புகார்தாரர் உள்ளிட்ட அனைவரிடமும் நான் முழு விசாரணை நடத்திதான் அனுப்பிவைப்பேன். ஆனால் ஆட்சியர் என்னை விசாரணை ஏதும் நடத்தவிடாமல் உங்களுக்கு ஆவணங்கள் வந்தால் உடனே ரெபர் செய்து அனுப்பவேண்டும் என்று கூறுகிறார். இதனால் குண்டர்சட்டம் வழக்கு தவறான பாதையில் நமதுமாவட்டத்தில் பின்பற்றப்படுகிறது’ என்றார்.

Related Stories: