பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு

முசாபர்பூர்: பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவமனையில் 109 பேரும்,  கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முசாபர்பூர் மாவட்டத்தில் பாதிப்பு கடுமையாக உள்ளது. இங்கு ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவமனையில் 398 பேரும், கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனையில் 154 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட பழங்களை தின்றதால் குழந்தைகள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் ஒரு குழந்தை இதே நோய் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மூளைக்காய்ச்சல் நோயால் ஏராளமான குழந்தைகள் இறந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட குழந்தைகள் நல மருத்துவர் கபீல்கான் மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.

இதற்காக சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற இலவச சேவையை தாமோதர்பூர் பகுதியில் தொடங்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார். மேலும் அவர் தனது டிவிட்டர் பதிவில் மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

Related Stories: