விமானப்படைக்கு 75 பயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல் ஆயுத வியாபாரி, ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு: 3 ஆண்டு விசாரணைக்குப் பிறகு அதிரடி

புதுடெல்லி: விமானப்படைக்கு 75 பயிற்சி விமானங்களை ரூ.2,895 கோடிக்கு வாங்க 2012ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதில், ஊழல் நடந்தது கண்டறிப்பட்டதால், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. விமானப்படையின் பயன்பாட்டுக்கு 75 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்குவதற்காக, கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியின்போது டெண்டர் விடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‘பிளாட்டஸ் விமான நிறுவனம்’ ஆர்வம் காட்டியது. இதற்காக ‘ஆப்செட் இந்தியா சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் சஞ்சய் பண்டாரி, பிமல் சரீன் ஆகியோரை பிளாட்டஸ் நிறுவனம் தொடர்பு கொண்டது. இந்திய விமானப்படையின் இந்த ஆர்டரை பெறுவதற்கு பண்டாரியுடன், பிளாட்டஸ் நிறுவனம் சேவை ஒப்பந்தம் செய்தது.

மேலும், பயிற்சி விமான கொள்முதல் ஒப்பந்தத்தை பெற, விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் உட்பட பலருக்கு கமிஷன் வழங்குவதற்காக ரூ.7 கோடியை ஆப்செட் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு (ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி, டெல்லி கிளை) கடந்த 2010ம் ஆண்டு அக்டோபரில் பிளாட்டஸ் செலுத்தியுள்ளது. இது தவிர, ரூ.350 கோடியை துபாயில் உள்ள ஆப்செட் நிறுவனத்தின் வங்கி கணக்கில் 2011ம் ஆண்டு முதல் 2015 வரை செலுத்தியுள்ளது.

இந்த கமிஷன் பேரம் முடிந்து வங்கி கணக்கில் பிளாட்டஸ் நிறுவனம் பணம் போட தொடங்கியதும், ரூ.2,895.63 கோடிக்கான பிளாட்டஸ் பயிற்சி விமான கொள்முதல் ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்துக்கு ராணுவ அமைச்சகம் கடந்த 2012ம் ஆண்டு மே 24ம் தேதி வழங்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தியது. அதில், இந்த ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதன் மூலம், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, அவரது ஆப்செட் இந்தியா சொல்யூசன்ஸ் நிறுவனம், பண பரிமாற்றத்துக்கு உடந்தையாக இருந்த தொழிலதிபர்கள் தீபக் வர்மா, பிமல் சரீன் மற்றும் அடையாளம் தெரியாத விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தப்படி, இந்த விமானங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு வரையில் தயாரித்து, விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

Related Stories: