மக்களின் பிரச்னைகளுக்கு பாமக தொடர்ந்து போராடும்: ராமதாஸ் பேச்சு

சென்னை: மக்களின் பிரச்னைகளுக்கு பாமக தொடர்ந்து போராடும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில், ‘வளர்க்கப்படுகிற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இனி பேரியக்கம் மீது கவனம் செலுத்த உள்ளேன். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் போது 7 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தை நாம் நடத்தினோம். ஆனால், நாங்கள் மரத்தை வெட்டியதாக கேட்பவர்கள் எத்தனை மரத்தை நட்டு வளர்த்தனர். இதேபோல், சென்னையை அடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றை கஞ்சா கல்லூரி என்றே அழைக்க வேண்டும். அந்த அளவிற்கு அங்குள்ள மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா உபயோகித்து வருகிறார்கள். இதனால், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.

பாமக ஜாதி கட்சி இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 வேட்பாளர்கள் பிற சமூகத்தை சேர்ந்தவர்களை போட்டியிட வாய்ப்பு அளித்தோம். ஆனால், இன்னும் எங்களை ஜாதி கட்சி என்றே விமர்சனம் செய்து வருகிறார்கள். தலித் மக்களுக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம்.

ஆனால், தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக பாமகவை காட்டுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை சுமத்துபவர்கள் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? பாமக தன்னுடைய பணியை தொடர்ந்து மேற்கொள்ளும். தமிழக மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பிரச்னைகளுக்கு பாமக தொடர்ந்து போராடும். ஆனால், சில ஊடகங்கள் இதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகின்றன. இவ்வாறு பேசினார்.

Related Stories: