சென்னை வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் சார்பில் மாபெரும் மருத்துவ கண்காட்சி தொடங்கியது: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர்

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர்.தினகரன் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் ஹெல்த் அண்ட் பிட்னஸ் தொடர்பாக மாபெரும் கண்காட்சி நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, நியூட்ரா பாக்ஸ்,  எத்திக் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து  ‘ஹெல்த் அண்ட் பிட்னஸ் எக்ஸ்போ - 2019’ என்ற மாபெரும் மருத்துவக் கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்துகின்றன.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க விழா இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த மாபெரும் மருத்துவ கண்காட்சியை, தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், ரிப்பன் வெட்டி துவக்கி  வைத்தார். சிறப்பு விருந்தினர்களான ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எம்.எஸ்.அசோகன், நியூட்ரா பாக்ஸ் பிஸினஸ் டெவலப்பிங் மார்க்கெட்டிங் ஆபிசர் ஆன்ட்ரோ லியோ, எத்நிக் ஹெல்த் கேர்  நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பி.யோக வித்யா, ‘மிஸ்டர் வேல்டு’ எம்.அரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தினகரன் நாளிதழின் மார்கெட்டிங் தலைமை பொது மேலாளர் பி.ராஜேஷ்கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை  தாங்கினார்.

இந்த கண்காட்சியில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனைகளின் அரங்குகள், சித்தா, யுனானி, அக்குபஞ்சர் மருத்துவமனைகளின் அரங்குகள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள் ,உடற்பயிற்சி நிலையங்கள்,  காப்பீட்டு நிறுவனங்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள், வாசனை திரவியங்கள், மருத்துவ உணவுப் பொருட்கள், மருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கண்காட்சியில், உடல் சார்ந்த நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன், உடல் பருமனால் ஏற்படும் கை, கால், மூட்டுவலி மற்றும் முதுகுவலி பிரச்னைகள், உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான  மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பல்வேறு முன்னணி மருத்துவமனைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்படுகிறது.

ஐவிஎப் சிகிச்சை முறையில் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை வழங்குவது மற்றும் அவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும். இதுபோன்ற முக்கியமான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை  வழங்கவும் கண்காட்சியில் பிரபல மருத்துவமனைகள் காத்திருக்கின்றன. மேலும் ஊட்டச்சத்து உணவு வகைகள், உடற்பயிற்சி உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் இடம் பெறுகின்றன. இந்த மருத்துவ கண்காட்சியில் பங்கு பெற்று  மருத்துவ சிகிச்சைகள் குறித்து அனைத்துவிதமான ஆலோசனைகளை பெறலாம்.

இந்நிலையில் காலை 10.30 மணிக்கு கண்காட்சி தொடங்கியவுடன் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் மருத்துவ கண்காட்சியில் உள்ள பல்வேறு  அரங்குகளுக்கு சென்று உடல் மற்றும் பிட்னஸ் தொடர்பான சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்று வருகின்றனர். இதைத் தவிர்த்து உடல் மற்றும் பிட்னஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாகவும்  கேட்டு அறிந்து கொண்டனர். இன்று காலை தொடங்கிய கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இலவசமாக கண்காட்சியில் உள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டு பல்துறை சார்ந்த மருத்துவர்களிடம் விளக்கங்களை  பெற்றுக் கொள்ளலாம். மேலும் கண்காட்சியில் ஆணழகன் போட்டி மற்றும் கட்டுடல் போட்டிகளும் நடைபெறும்.

Related Stories: