குடிநீர் தட்டுப்பாடு எனக்கூறி தனியார் பள்ளிகளை மூடினால் அங்கீகாரம் ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபி: குடிநீர் தட்டுப்பாடு என காரணம் கூறி பள்ளிகளை மூடினால் தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச மடிகணிணி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: அரசு பள்ளிகளில் எவ்வித கட்டணமும் வாங்காமல் அனைத்து வசதிகளும் செய்து தரும் நிலையில், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் செய்ய முடியும்.

தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதே போன்று உள் கட்டமைப்பு இல்லாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளியில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இடைநிற்றல் ஒரு சதவீதமாக உள்ளது. 99 சதவீத மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. இடைநிற்றல் குறைவாக உள்ள மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் புதிய திட்டங்கள் குறித்து அறிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: