ஓமன் வளைகுடாவில் கண்ணிவெடி தாக்குதல் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு கடற்படை கமாண்டோ பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்துவதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்களில் கடற்படை கமாண்டோ படையை பாதுகாப்புக்க அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ளமோதல் காரணமாக ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை பல நாடுகள் நிறுத்தி விட்டன. இந்நிலையில், ஓமன் வளைகுடாவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் அமெரிக்க ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது கடல் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு ஈரானும், அதன் ஆதரவு தீவிரவாத அமைப்புகளும்தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

சமீபத்தில் 2 சவுதி கப்பல்கள் மீதும், அதற்கு முன் 4 எண்ணெய் கப்பல்கள் மீது இதுபோல் தாக்குதல் நடத்தப்பட்டன.  இந்நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்களில், இந்திய கடற்படை கமாண்டோ படை வீரர்களையும், அதன் அதிகாரிகளையும் பாதுகாப்புக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடலில் கண்ணி வெடிகள் மிதக்கிறதா என்பதை கண்காணிக்காவும், தாக்குதல் நடந்தால் அதை முறியடிப்பதற்கும் தேவையான ஆயுதங்களுடன் கடற்படை வீரர்கள் செல்கின்றனர்.

புதிய போர்க்கப்பலில் தீ

மகாராஷ்டிராவில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில், இந்திய கடற்படைக்காக ‘விசாகப்பட்டினம்’ என்ற பெயரில் புதிய போர்க்கப்பல்  கட்டப்பட்டு வருகிறது. இந்த கப்பலின் 2ம் தளத்தில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 8 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்துக்கான காரணம் விசாரணைக்குப் பின் தெரியவரும். தற்போது கப்பலின் சேதத்தை முடிந்தவரை குறைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: