பிஇ, பிடெக் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 8 படிப்புகள் ரத்து, 19 கல்லூரிகள் பங்கேற்கவில்லை

சென்னை: தொழில் நுட்பக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் 25ம் தேதி தொடங்க உள்ளது. ரேண்டம் எண்கள் ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. தகுதியுள்ள 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவ மாணவியருக்கு கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை  சான்று சரிபார்ப்பு நடந்தது. சான்று சரிபார்ப்பில் தகுதி பெற்ற 1 லட்சத்து 3 ஆயிரத்து 150 பேருக்கான தரவரிசைப் பட்டியலை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது. இதற்கான நிகழ்வில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: பி.இ, பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் சான்று சரிபார்ப்புக்கு பிறகு தகுதி பெற்றுள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து  150 மாணவ மாணவியருக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அதில் 10 பேர் முன்னணியில் உள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். 2 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ்  படித்தவர்கள். ஒரே ஒரு நபர் மட்டும் ஆந்திர மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னணி பட்டியலில் இடம் பிடித்த 10 பேரில் அரவிந்தன், ஹரிஷ் பிரபு, பிரதிபா செந்தில் ஆகிய மூவரும் தலா 200 கட்ஆப் பெற்றுள்ளனர். லல்லுபிரசாத், சிவ்சுந்தர், பிரியன், வினோதினி, ேஜான் ஜெனிபர், கார்த்திக் பாலாஜி, கவுசிக்  ஆகியோர் 199.5 கட்ஆப் பெற்றுள்ளனர். இந்நிலையில், தகுதி பெற்றுள்ளவர்களில்  1 லட்சத்து 1 ஆயிரத்து 692 பேர் பொதுக் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளனர். தொழிற்கல்வி  பிரிவுக்கான கவுன்சலிங்கில் 1458 பேர், தகுதி பெற்றுள்ளனர். இந்த  ஆண்டு விண்ணப்பித்துள்ள நபர்களில் மாற்றுத் திறனாளிகள் 216 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1537 பேர், விளையாட்டு வீரர்கள் 4616 பேர், விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சலிங் 25ம் தேதி  தொடங்கும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வாரிசுகளுக்கு 26ம் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் 27ம் தேதியும், நடக்கும். தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 26ம் தேதி  முதல் 28ம் தேதி வரை கவுன்சலிங் நடக்கும்.  பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 3ம் தேதி தொடங்கும். இதற்கு பிறகு துணை கவுன்சலிங் ஜூலை 29ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியல் தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்படும். நான்கு நாட்களுக்கு மாணவர்கள் அதில் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். அதில் சந்தேகம் இருந்தால் விளக்கம்  பெற தொலை பேசி எண்கள் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 2 தொலைபேசி எண்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி 044-22351014, 22351015, 22350523, 22350527, 22350529 என்ற எண்களில்தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இந்த எண்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இந்த வசதிகள் செய்யப்பட்ட பிறகு 5525 பேர் விளக்கம்  பெற்றுள்ளனர். மேற்கண்ட போன்கள் மூலம் 2364 பேர் விளக்கம் கேட்டு பெற்றுள்ளனர். இ மெயில் மூலம் 24 ஆயிரத்து 700 பேர் விளக்கம் பெற்றுள்ளனர். இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

* இந்த ஆண்டு கவுன்சலிங்கில் இடம் பெற உள்ள கல்லூரிகளில் 443 சுயநிதி கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 662 இடங்கள் உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 6720  இடங்கள் உள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 8840 இடங்கள் உள்ளன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1114 இடங்கள் உள்ளன. இது  தவிர மத்திய அரசு பொறியியல் கல்லூரியில் 185  இடங்கள் உள்ளன.

* அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு 9110 இடங்கள் கவுன்சலிங்கில் இடம் பெற்றது. ஆனால், இந்த ஆண்டு 270 இடங்கள் குறைந்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் வளாகத்தில் உள்ள துறை சார்ந்த படிப்புகளில் 8 பாடப்பிரிவுகளில்  மாணவர்கள் குறைவாக சேர்ந்ததால் அந்த 8 பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கான இடங்கள் இந்த ஆண்டு கவுன்சலிங்கில் இடம் பெறாது.

* இந்த ஆண்டில் பிஇ, பிடெக்கில் மொத்தம்1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 29342 இடங்கள் கவுன்சலிங்கிற்காக சரண்டர் செய்யப்பட்டுள்ளன.இந்த இடங்களும் மேற்கண்ட மொத்த இடங்களில்  அடங்கும்.

* அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அதை சரி செய்ய தற்ேபாது வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஜூலை மாதம் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில்  உள்ள கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளுக்கும் வேண்டியதண்ணீர் லாரிகள் மூலம் சப்ளை செய்ய ஏற்பாடு செய்வோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: