ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு: விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த மே மாதம் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்ற வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. முன்னதாக, பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சீலை அகற்ற வேண்டும் எனவும் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்ததோடு, உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. அதன்படி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, 2வது முறையாக நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்மனுதாரராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதன்படி, வைகோ இன்று நேரில் ஆஜராகியிருந்தார். அதேசமயம், நாம் தமிழர் தரப்பில் இசக்கித்துரை என்பவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் தொழிலாளர்கள் தரப்பில் தங்களை இந்த வழக்கில் ஆலைக்கு ஆதரவாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இல்லாதவர்களை புதிதாக சேர அனுமதிக்க முடியாது என்றும் ஆலைக்கு ஆதரவாகவும் புதிதாக யாரையும் சேர்க்க முடியாது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும், மாசுகட்டுப்பாடு வாரியமும் இன்று பதில் மனு தாக்கல் செய்வதாக நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். அதன்பிறகு, வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், இணைப்பு மனுக்கள் இரண்டையும் நிராகரிப்பதாகவும் உத்தரவிட்டனர்.

Related Stories:

>