சதாப்தி, ராஜ்தானி உட்பட தனியார் ரயில்களுக்கு விரைவில் அனுமதி

புதுடெல்லி: சதாப்தி, ராஜ்தானி உட்பட சில வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை தனியார் மூலம் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக முதலில் 2 ரயில்களை இயக்கி விட்டு பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு தொடர்பாக நிதிஆயோக் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தனியார் ரயில்கள் திட்டம் கொண்டுவரப்படுகிறது. அதிக ரயில் போக்குவரத்து  இல்லாத வழித்தடங்களில், சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் தனியார் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தங்க நாற்கர திட்டம் போல, நாட்டின் முக்கிய நகரங்களையும் சுற்றுலா தலங்களையும் இணைக்கும் வகையில் அமையும்.

Advertising
Advertising

முதல் கட்டமாக ஐஆர்சிடிசி மூலம் 2 ரயில்கள் சோதனை முயற்சியாக இயக்கப்பட இருக்கின்றன. இதனை தொடர்ந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த திட்டப்படி, ரயில்கள் தனியாரிடம் குத்தகை முறையில் ஒப்படைக்கப்படும். ரயில்வே பைனான்ஸ் கார்ப்பொரேஷனிடம் குத்தகை தொகையை கட்டிய பிறகு, ரயில் டிக்கெட், இயக்கம் உள்ளிட்ட சேவைகளை குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். இந்த திட்டம் தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் டெண்டர் வெளியிடப்படும் என்றனர்.

மானியத்தை விட்டுடுங்க ப்ளீஸ்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க, வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டருக்கான மானியத்தை விட்டுத்தருமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதன்படி ஏராளமானோர் மானியத்தை விட்டுத்தந்தனர். இதுபோல், ரயில் டிக்கெட் மானியத்தை விட்டுத்தந்து உதவ வேண்டும் என்ற பிரசாரத்தை தீவிரப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே டிக்கெட்களில் அரசு மானியம் இவ்வளவு என குறிப்பிடப்படுகிறது. மூத்த குடிமக்கள் சலுகை கட்டணம் வேண்டும் என குறிப்பிட்டால்தான் மானியத்துடன் டிக்கெட் வாங்க முடியும்.  இதுபோல் அனைத்து பயணிகளிடமும் இந்த வேண்டுகோளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்த செலவில் டிக்கெட்டுக்கு 53  சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories: