குஜராத் மாநிலங்களவை தேர்தல் சர்ச்சை : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: குஜராத்தின் 2 ராஜ்யசபா எம்.பி பதவி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத் மாநிலங்களவை தேர்தல் சர்ச்சை

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ தலைவர் அமித் ஷாவும், அமைச்சர் ஸ்மிருதி இரானியும் மக்களவைத் தேர்தலில் காந்தி நகர் (குஜராத்), அமேதி (உபி) தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களில் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும், ஸ்மிருதி இரானி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதனால், இம்மாநிலத்தில் 2 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என்று கடந்த சனிக்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும், இந்த 2 இடங்களுக்கும் தனித்தனியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு,  தனித்தனியாகவே தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மனு தாக்கல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்ரேலி தொகுதி எம்எல்ஏ.வும், குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பரேஷ்பாய் தனானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘ஒரே மாநிலத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகும். அது மட்டுமின்றி, விகிதாச்சார பிரதிநிதித்துவ திட்டத்திலும் குழப்பத்தை விளைவிக்கும். எனவே, இந்த 2 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரரின் வழக்கறிஞர் விவேக் தாங்கா கேட்டுக் கொண்டார். இதை விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யகாந்த் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதற்கு முன், கடந்த 1994, 2009ம் ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக, கடந்த 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: